மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 9-ந்தேதி அறுபத்து மூவர் விழா
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 9-ந்தேதி அறுபத்து மூவர் விழா நடக்க உள்ளது. பங்குனி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
மயிலாப்பூரில் பிரம்மனின் அகம்பாவத்தைகளையும் வண்ணம் சிவபெருமான் அவருடைய ஒரு தலையை கொய்து கபாலத்தைக் கையில் ஏந்தியிருக்கும் ஈசுவரர் கபாலீசுவரராக காட்சி அளிக்கிறார். இங்கே உமா தேவி மயில் உருவெடுத்துப் பெருமானைப் பூசித்தார்.
இத்தலம் நோய் தீர்க்கும் திருத்தலமாகவும், ஆயுள் விருத்திக்கான திருத்தலமாகவும் பெண்களுடைய வரங்களை நிறைவேற்றும் தலமாகவும் போற்றப்படுகிறது. இச்சிவலிங்கம் சத்யோஜாத மூர்த்தமாக இருப்பதால் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் திருத்தலமாகவும் விளங்குகின்றது.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழா மிகுந்த சிறப்புகள் கொண்டது.
இத்திருவிழா பங்குனி பவுர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பஞ்ச மூர்த்திகளின் உற்சவர் திருமேனிகள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். இந்த உலா ஒளிவிளக்குகளோடும், நாதஸ்வர இன்னிசை யோடும், வேதமுழக்கம், தேவாரப் பாடல்களோடும் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முதல் நாள் (சனிக்கிழமை) அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம். ஆராதனைகள், மண விருந்தும் நடைபெறும். அன்றைய தினம் திருக்கோயிலின் கிராம தேவதையான அருள்மிகு கோலவிழி அம்மனுக்கு பஞ்சமூர்த்திகளின் புறப்பாடுக்கு முன்பே புறப்பாடு செய்யப்படுகிறது.
2-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கும். தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
எட்டாம் நாள் திருவிழா அன்று காலை சிவநேசர், திருஞனசம்பந்தர், அங்கம் பூபாவை உற்சவர்கள் மேற்கு மாட வீதிகுளக்கரைக்கு எதிரில் திருமஞ்சனத்திற்கு எழுந்தருளுவர். சிவநேசருக்கும் சம்பந்தருக்கும் மகா அபிஷேகம் நடை பெறும்.
சிவநேசர், சம்பந்தருடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளி இறைவனிடம் உத்தரவு பெற்று அங்கம்பூம்பாவையின் எலும்புடன் கூடிய குடத்தை குளக்கரைக்கு எடுத்துச் சென்று மதியம் சுமார் 12.00 மணி அளவில் திருஞானசம்பந்தரின் மட்டிட்ட என்று தொடங்கு பதிகத்தைப் பாடி எலும்பைப் பெண்ணுருவாக்கி அற்புதம் நிகழ்த்திய காட்சி விழாவாக நடைபெறும்.
பிறகு மண்டகப்படி முடித்துக் கொண்டு மாட வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபம் சேருவர். அப்போது 3 மணிக்கு அருள்மிகு கபாலீசுவரர் வெள்ளி விமானத்தின் மீது எழுந்தருளி சிவநேசர், திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை மற்றும் 63 நாயன்மார்களுக்கும் காட்சி அளிப்பார். இவ்விழா உலகப் பிரசித்தி பெற்ற மிகச் சிறப்பானதாகும்.
பின்னர் திருவீதி உலா நடைபெறும். இவ்விழாவின் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் போது பக்தர்கள் பலரும் மண் பானைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், சாக்லெட், பிஸ்கட், மிட்டாய்கள் போன்ற இனிப்பு வகைகளை இறைவனுக்கு படைத்து வினியோகம் செய்வர்.
மேலும் பொதுமக்கள் பலர் தாமாகவே முன்வந்து நீர், மோர் மற்றும் அன்ன தானம் வழங்குவர். அருள்மிகு கபாலீசுவரர், பஞ்சமூர்த்திகளுடனும் அறுபத்து மூன்று நாயன்மார்களுடனும் காட்சி கொடுத்தருளும் ஐதீகம் நடைபெறும்.
பின்பு வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபத்தில் தீபாராதனையும் அறுபத்து மூன்று நாயன்மார் வலம் வரும் காட்சியும் நடைபெறும்.
பத்தாம் நாள் காலை நடராஜபெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்று பிறகு தீர்த்தவாரி நடைபெறும். பின் திருவீதி உலா உற்சவம் நடைபெறும்.
பஞ்சமூர்த்திகளுக்கு குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு திருவீதி உலா உற்சவம் நடைபெறும். மாலையில் கபாலீசுவரர் கோவிலுக்குள் புன்னை வனநாதர் சன்னதியில் கற்பகாம்பாள் மயிலுருவாக இருந்த சாபம் நீங்கப்பெற்று இறைவனைப் பூஜித்து கபாலீசுவர் திருக்காட்சி பெற்றுத் தன் சுயஉருவடைந்து திருக்கல்யாணம் நடைபெறும்.
Leave a Comment