மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28-இல் தொடக்கம்
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை சித்திரைத் திருவிழா அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் சிறப்பு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, மே 5ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மே 6ஆம் தேதி சனிக்கிழமை திக்கு விஜயமும், 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறும்.
மே 8ஆம் தேதி காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும், அன்று மாலை பூப்பல்லக்கும் நடைபெறுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.
மே 9ஆம் தேதி ஸ்ரீ கள்ளழகருக்கு மதுரையில் வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறும். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அன்று இரவு தங்கி அருள்பாலிக்கும் கள்ளழகர் மே 10ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார்.
அன்று இரவு வண்டியூர் அனுமார் திருக்கோயிலில் எழுந்தருளும் கள்ளழகர், மே 11ஆம் தேதி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றின் நடுவில் உள்ள உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறுகிறது.
மே 12 ஆம் தேதி இரவு தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கி பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். மே 13 ஆம் தேதி மலைக்கு மீண்டும் கள்ளழகர் புறப்பாடாகிறார்.
சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சியும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து தற்போது மேற்கொண்டு வருகின்றன.
Leave a Comment