திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய வசதி


திருப்பதி திருமலையில் உள்ள காத்திருப்பு அறைகளில் 24 மணி நேரமும் மருத்துவச் சேவை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் சமயங்களில் இருதய, நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.


அதனால் தேவஸ்தானம் வைகுண்டம் 2-இல் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள் கொண்ட மருத்துவ நல மையத்தை தொடங்கியது. பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் சமயத்தில், மருத்துவர்களின் உதவி கூடுதலாக தேவைப்படுவதால் வைகுண்டம் 1-லும் தேவஸ்தானம் மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இருதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி உள்ளதால் தேவஸ்தானம் வைகுண்டம் 1-இல் கூடுதலாக ஒரு மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ மையங்கள் செயல்படவில்லை. தற்போது அனைத்து மருத்துவ மையங்களிலும் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு பாராமெடிக்கல் ஊழியர், ஒரு எம்.என்.ஓ. அல்லது எப்.எம்.என்.ஓ 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதனால் இனி 24 மணி நேரமும் காத்திருப்பு அறைகளில் உள்ள மருத்துவ மையங்கள் திறந்திருக்கும். மேலும் இங்கு விலையுயர்ந்த அனைத்து மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காத்திருப்பு அறைகளில் நடமாடும் மருத்துவ மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறினால் அவர்கள் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்தது.



Leave a Comment