திருப்பதி கோயிலில் 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்பயாகம்
திருப்பதி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 7வது நாள் புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கைவிடப்பட்ட இந்த புஷ்ப யாகத்தை 1980ம் ஆண்டு முதல் மீணடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவனம் ( திருவேணம் ) நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி திருமலை பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து துளசி, சாமந்தி, மல்லிகை, முல்லை, தாழம்பூ, ரோஜா, தாமரை, உள்ளிட்ட 18 வகையான 7 டன் மலர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட சுகந்த திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு நட்சத்திர ஆரத்தி நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு வேத மந்திரம் முழங்க புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சகஸ்கர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழுத்தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Leave a Comment