உலகின் மிகப்பெரிய ஆலயம் - 14


சிறுவயதில் கடலில் குளிக்கும்போது கொஞ்ச நேரம் கழிந்ததுமே எங்களை அப்பா விரட்டத் தொடங்கி விடுவார். “போதும்.. போதும் வாங்க வெளியில..” என்று கடலில் இறங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்தே அதட்டத் தொடங்கி விடுவார். ஆனால், அவரும் எங்களோடு சேர்ந்து குளித்தால் அவ்வளவு சீக்கிரமாகக் கூப்பிட மாட்டார். ஆகவே, அம்மா கரையில் உட்கார்ந்திருக்க நான், இரண்டு அண்ணன்கள், அக்கா நால்வரும் எப்படியாவது அப்பாவைக் கடலுக்குள் இழுத்துப் போட முயல்வோம்.

இல்லாவிட்டால் இந்த மனுசன் நம்மளைக் குளிக்க விடமாட்டார் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். கடலுக்குள் இறங்கிவிட்டால் அப்பா வேற்று மனிதர். கரையில் சட்டை, கால்சட்டையோடு அதிகாரத்தையும் கழற்றி வைத்து விடுவார். கால்களையும் கைகளையும் மல்லாக்கப் பரப்பிக் கடல்பரப்பில் ஒரு சடலம் போல அவரால் மிதக்க முடியும். மூச்சை சீராக மெல்ல விட்டுக் கொண்டே அசையாமல் அலையின் தாளத்திற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். ஊரே வேடிக்கை பார்க்கும். நான் சிறுவயதில் செய்ய முயன்று தோற்ற கலை.

பதின்ம வயதில் என்னாலும் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் காதுக்குள் கடல்நீர் போகாமல் இலாகவமாய்ச் செய்ய வேண்டும். உப்புநீரின் அடர்த்தி காரணமாக அவ்வாறு கடலில் எளிதில் மிதக்க முடியும். நன்னீர்க் குளங்களிலும் நகர்ப்புற நீச்சல் குளங்களிலும் அவ்வாறு மிதப்பது கடினம். கடலுக்குள் அப்பாவின் தோள் மீது ஏறிக் குதித்துக் கும்மாளம் போடுவது எங்களுக்குப் பிடித்தமான ஆட்டம். ஆனால், அப்படி அதிக சந்தர்ப்பங்கள் வாய்த்தது இல்லை.

வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து, நினைவு தெரிந்த காலம் முதலே மற்றவர்களை ஏவல் செய்து பழக்கப்பட்டவர் என் தந்தை. துளி எதிர்ப்பையும் அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ ஒருக்காலும் முடியாது. விவரம் தெரிந்ததும் அடிக்கடி அப்பாவிடம் சொல்வோம்.. “அப்பா நாங்க ஒங்க பியூன் இல்லப்பா” என்று. அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ( இப்போது 85 வயதில் முதுமையும் தாத்தா பதவியும் அவரைக் கனிய வைத்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரமுகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது..J)

ஆகவே, கடலை விட்டு “வெளியே வாங்கடா” என்றதும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தமுறை கடற்கரைக்கு அழைத்துப் போகமாட்டார். இந்த அச்சத்தின் காரணமாக அப்பாவின் அதிகாரத்துக்கு உடனே பணிந்து விடுவோம். இருந்தாலும் கடல் எங்களைப் பின்னாலிருந்து அலைகள் மூலம் அறைந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். பிரிய முடியாமல் பிரிந்து வருவோம். “இவர் கூட வந்ததுக்கு ஒரு தாசில்தார் கூட வந்திருந்தாக்கூட இன்னும் கொஞ்ச நேரம் கடல்ல ஆடவிட்ருப்பாரு..” என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே கரையேறுவோம்.

ஒருவகையில்,அந்த மனநிலையில்தான் இருந்தோம் நானும் பரணியும் அங்கோர் வாட்டின் உச்சியில்... உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் காணும் வாய்ப்பு எல்லாருக்குமா வாய்த்து விடுகிறது? ஏதோ எங்களுடைய நல்லூழோ.. எங்கள் மூதாதையர் நல்லூழோ.. எங்களுக்கு வாய்த்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட வேண்டுமா என்ற ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை எங்களால்.

பரணிக்குக் கோபமே வந்துவிட்டது. “இது என்ன இம்புட்டு அழகா இருக்கு இந்த இடம் !.. இதை விட்டுட்டு எப்படிங்க அரை நாள்ல கெளம்புறது ? ஒரு வாரம் இதுக்கு மட்டும் போட்ருக்கணும் மகா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார். என் நிலைப்பாடும் அதுதான்.

ஆனால் என்ன செய்யமுடியும் ? புறப்பட்டே ஆக வேண்டும். நாளை மாலையில் எங்களுக்கு சிங்கப்பூருக்கு விமானம். இங்கிருந்து புறப்பட்டுப் பின்னிரவுக்குள் புனோம் பென் போனால்தான் தூங்கி எழுந்து நாளைக் காலையில் அரண்மனை, அரும்பொருளகம் எல்லாம் பார்த்துவிட்டு மாலை நாலு மணிக்கு விமானத்தைப் பிடிக்கலாம். புனோம் பென் இங்கிருந்து ஏழெட்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது. பாயோன் கோயில் வேறு அடுத்துப் பார்க்க வேண்டும். மனமின்றிக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

செங்குத்தான படிகளைக் கவனமாகக் கடந்து கீழிறங்கினோம். ராஜூ, மகாதேவன், நவீன் கீழே எங்களுக்காகக் காத்திருந்தனர். ஐவரும் அப்படியே மூன்றாமடுக்கை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்தோம். எங்கள் வலக்கைப் பக்கம் சின்னக் குன்றுபோல் ஆலயம் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே மேலே ஏறிச் செல்லப் படிக்கட்டுகள். கற்களுக்கு அடியில் கட்டுமானம் எப்படியிருக்கும் என்பதைக் காணும் வகையில் சில இடங்கள் தெரிந்தன. வெளித் தெரிந்த கற்களுக்குக் கீழே சில இடங்களில் கான்கிரீட் தூணால் முட்டுக்கொடுத்துள்ளனர்.

தஞ்சைப் பெரிய கோயிலைப் போல் இதையும் எவ்விதக் கலவையும் வைத்து இணைக்காமல் கற்களை ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்தே கட்டியிருக்கிறார்கள். அகழியில் வெட்டியெடுத்த மண்ணை நடுவில் கொட்டி மேட்டை உருவாக்கி அதன் பக்கங்களில் கற்களை அடுக்கிக் கரைகட்டி மேலே மேருக்களை உருவாக்கியுள்ளனர்.

பல்லாயிரம் டன் எடையுள்ள மண் சரிந்து போகாமலும், கல் கட்டுமானத்தின் எடையைத் தாங்கும் விதமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அங்கோர் வாட் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் அருகில் நிற்கும்போதுதான் இதன் பிரமாண்டத்தையும் இதன் அருமையையும் தெளிவாக உணர முடியும். மற்றபடி எவ்வளவு வருணித்தாலும் அதை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

எங்களுக்கு இடப்பக்கம் இரண்டாம் அடுக்கின் தாழ்வாரங்கள் வந்து கொண்டேயிருந்தன. நம்ம ஊர் தொட்டில் கம்பு போன்ற உருளைத் தூண்களோடு சாளரத்தின் பலகணிகள்... தில்லைப் பொன்னம்பலத்தை நினைவுறுத்தும் வளைந்த கூரைகள். ஆலயக் கட்டுமானத்தின் இடுக்குகளில் ஆங்காங்கே சில செடிகள் துளிர்த்திருந்தன. பெரும்பாலும் அரச மரச் செடிகள். பளீரெனச் சிரித்தன அரசிலைகள். இந்தச் சின்னச் சின்னச் செடிகள்தான் நாளை பெரிய விருட்சமாகி ஆலயத்தையே பிளந்துவிடும். உழவாரப் பணி செய்ய எந்த நாவுக்கரசர் கம்போடியாவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

வெளிநாட்டுக்காரர்கள் வியந்து வியந்து பார்த்து மாய்ந்து மாய்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க, உள்நாட்டுப் பயணிகள் சிரித்துக் கும்மாளமிட்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி வந்து சென்ற இடமாக இருக்கலாம். இதுபோன்ற வேறு பல ஆலயங்கள் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேகூட இருக்கலாம். தோட்டத்து மூலிகைக்கு எப்போதுமே மவுசு கம்மிதானே ?

ஐந்து மேருக்களையும் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். வழியில் தென்பட்ட நான்கு திசை மேருக்களையும் கீழிருந்து பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மேருவுக்கும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள். அதன் இருபுறமும் துவாரபாலகர்களைப் போல அப்சரஸ்கள். அங்கிருந்து வெளியேறி வந்தால் ஆலயத்தின் நேர் பின்புறம் வந்துவிடும். இது கிழக்குப் பகுதி. ஆளரவமின்றி ஓய்ந்து கிடந்தது இந்த இடம். நடுவில் ஒன்றும் பக்கத்து ஒன்றுமாக மொத்தம் மூன்று நுழைவாயில்கள். நாங்கள் வலப்பக்கமாக உள்ள வாயிலின் வழியாக வெளியே வந்திருந்தோம்.

இது சிவன் கோயிலாக இருந்திருந்தால் இது முக்கிய நுழைவாயிலாக இருந்திருக்கும். வெளியேறும் வாயில் பகுதி படிப்படியாக உயரம் குறைந்து வருகிறது. கடைசிப் படிக்கட்டை உள்நோக்கித் தள்ளினால், படிகளும் அவற்றை மூடியிருக்கும் மாடங்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ரஷ்ய மட்ரியோஷ்க பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி மடங்கிக் கொள்ளும் போலிருந்தன.

இந்தப் பக்கத்திலிருந்த பலகணிகள் பலவும் சிமெண்ட் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆலய வெளிப்பிரகாரத்தில் வலப்பக்க வாயிலின் அருகே வட்டக் கூம்பு வடிவத்தில் ஓர் அமைப்பு சின்னதாக இருந்தது. மேலே எல்லாம் புல் முளைத்துப் போயிருந்தது. அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ பௌத்தத் தூபி போலிருந்தது பார்க்க. கவிழ்த்த மணி போலவும் காம்புள்ள ஊமத்தம் பூவைப் போலவும் இருந்தது அதன் மேல்பகுதி.

அதைக் கடந்து வந்தால், சுற்றுச்சுவர் போன்ற உயரம் குறைந்த நீண்ட சுவர். அதன் நடுவே ஏழு தலை நாகம் படம் எடுப்பது போல் இரண்டு வரவேற்பு அலங்காரங்கள். அகழியைத் தூர்த்து வெளிப்புறச் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது இந்த இடம். அங்கோர் வாட்டைப் பின்னணியாக வைத்து ஐந்து பேரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இதைத் தாண்டிவந்து வாகனத்தில் ஏறப்போகும் முன்னால் மற்றொரு பழமையான கட்டடம். அங்கோர் வாட் ஆலயத்தின் ஒரு பகுதியைக் கன கச்சிதமாக அறுத்துப் புல்தரையில் வைத்ததுபோலிருந்தது அந்தக் கட்டடம்.

அதே கட்டுமான பாணி. அதே போன்ற அப்சரஸ்கள். கைவிடப்பட்டுக் கிடந்தாலும் களையாக இருந்தது கட்டடம். முன்மண்டபத் தூண் சரிந்து மிக விரைவில் விழுந்து விடும் போலிருந்தது. கட்டடத்தின் பக்கவாட்டில் சுற்றுச் சுவர் தெரிந்தது. சந்தடியின்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த இடமே ஓர் அமானுஷ்யத்தன்மையோடு இருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவே அது நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இங்கேயே உறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

வேறு வழியின்றி என் காலை நிலத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம். வயிறு கடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை பசி தெரியவில்லை. பிற்பகல் மணி மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. காலை ஹோட்டலில் சாப்பிட்ட ஆம்லெட், ரொட்டி, பிரட்டிய சோறு, பழம், காஃபி எல்லாம் கரைந்து விட்டன. வாகனத்தில் அகழியின் அழகைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

நம் கிராமத்து உணவகம் போன்ற சூழல். ஆனால் பெரியது. மெனு கார்ட் எல்லாம் இருந்தது. முதலில் எல்லாரும் இளநீர் கேட்டு வாங்கிக் குடித்தோம். பெரிய கொப்பரைத் தேங்காய் போலிருந்தது இளநீர். ஒரு காயிலேயே இரண்டு, மூன்று குவளை இளநீர் இருந்தது. நல்ல இனிப்பு என்று சொல்லிவிட முடியாது. அதேவேளையில் உப்பு நீரென்று தள்ளவும் முடியாது. ஆனால், அப்போது எங்களுக்கு இருந்த தாகத்துக்கு அந்த இளநீர் தேனாய் இனித்தது. ஓர் அமெரிக்க டாலர் விலை. இங்கே உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலை. அவர்களுக்குள் கம்போடிய நாணயத்தில் புழங்கிக் கொள்கிறார்கள். நமக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை.

சாப்பாட்டு மேசையில், நடுநாயகமாக அங்கோர் வாட் வந்து எங்களுக்கு முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. அவரவர் அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிப் பேசிக் கொண்டே இருந்தோம். இடையிடையே உணவு உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் பார்க்க அரை நாளை மட்டுமே ஒதுக்கிய எங்கள் அறியாமையை நாங்களே நொந்து கொண்டோம்.

அவரவர் குடும்பத்தோடு வந்து ஆற அமர இருந்து அங்கோர் வாட்டை அணுவணுவாய் ரசிப்பதென ஜமாத்தில் முடிவானது. அதன்பிறகுதான் பரணி ஒரு நிலைக்கு வந்தார். அவித்த கோழி சேர்த்துப் பிரட்டிய சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்ட கையோடு “அந்தக் குதிரை வீரனைப் பாத்தீங்களா ? ஈட்டியை ஒரு கையில வைச்சிக்கிட்டு என்னவொரு ஆக்ரோஷமாப் பாயத் தயாரா இருந்தான்னுட்டு?” என்று ராஜூ ஆரம்பிப்பார். உடனே, மகாதேவன் “சான்ஸே இல்லை ராஜூ” என்பார். உடனே பரணி இணைந்து கொள்வார், “அந்த அப்சரஸ் முகத்தைப் பாத்தீங்களா ? எல்லாம் ஒரே போல ஒண்ணாசெஞ்சி வைச்சிருக்காய்ங்க” என்பார். உடனே ஏதோ நினைவு வந்ததுபோல், “ஏங்க இதை எப்புடீங்க பிளான் பண்ணிருப்பான் ஒருத்தன் ? எவ்வளவு மண்டை இருக்கணும் அவனுக்கு ?” என்பார்.

ராஜூ ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி நிறுத்திவிடுவார். மகாதேவன் அதை ஆமோதிப்பதோடு சரி. நவீன் எல்லாத்துக்கும் மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். ஆனால், நானும் பரணியும்தான் ஓட்டைவாய்கள். லொட லொடவென்று எதையாவது பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே புகுந்தால், பேச்சின் ஓட்டம் தடைபடும் என்பதால் குறுக்கே புகமாட்டோம். எதையாவது ஒன்றை வருணிக்க வேண்டி வந்தால், படித்த பழைய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும் பரணிக்கு. பிரபஞ்சனின் அந்தியந்த தாசர் பரணி.

இலக்கியம் படிப்பது வாழ்க்கையின் பல தருணங்களை அழகாக்கி விடுவதை நாங்கள் இருவருமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கண்ணில் காணும் காட்சியை உடனே மனம் பழைய புத்தக இடுக்கில் தேடி எடுத்த வார்த்தைகளோடு கோத்துப் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் சந்திப்புகளில் அங்கோர் வாட் பெரும்பகுதி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் அரட்டை நீள்வதைப் பார்த்து ஓட்டுநர் ரா, எச்சரிக்கை மணி அடித்தார். இன்னும் நாம் பாயோன் கோயில் பார்க்க வேண்டும். இருட்டுவதற்குள் சியாம் ரீப்பிலிருந்து புறப்பட வேண்டுமென்று.

காலையில் எங்கள் அறையைக் காலி செய்து மூட்டைகளையெல்லாம் ஹோட்டலிலேயே விட்டுவந்திருந்தோம். நாங்கள் அங்கோர் வாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடி சென்று எல்லாப் பெட்டிகளையும் ரா எடுத்து வந்து வாகனத்தில் வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்து தெம்புடன் வேனில் ஏறி பாயோன் கோயிலை நோக்கிச் சென்றோம். அங்கோர் வாட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கோர் தாம் என்ற பழம்பெரும் நகரக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளது பாயோன் ஆலயம்.

பூமியும் சுவர்க்கமும் சந்திக்கும் இடத்தில் அந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. அங்கோர் வாட் ஆலயம் கட்டி முடிந்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாயோன் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதன்மையாக இது ஒரு பௌத்த ஆலயம்தான் என்றாலும் இந்து சமய அம்சங்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சையில் எனக்கு சைவத்தில் பற்றுடைய புலவர் ஐயா ஒருவர் அறிமுகம் உண்டு. அவர் பெயர் புலவர் சொக்கலிங்கம். பாரதி பனியன் ஸ்டோர் இரத்தினம் மாமா மூலமாக அறிமுகமான பழுத்த சிவப்பழம். அவரோடு ஒருமுறை தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கதை சொல்வார். தஞ்சை, நாயக்க மன்னர்கள் வசம் வந்த பிறகு, அந்த ராசாவுக்கு மதுரையிலிருந்து பெண் கட்டி வந்தார்களாம்.

பாண்டியகுமாரிக்குத் தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றிக் காட்டிய மன்னர், “பார்த்தாயா நீ வாழப் போகும் அரண்மனை எவ்வளவு பெரியதென்று ?” எனச் சவடால் விட்டிருக்கிறார். உடனே மதுரைக்கார மகாராணி, இடுப்பில் ஒரு கையை வைத்து முகத்தில் ஏளனம் தொனிக்கச் சொன்னாளாம், “ஹூம், இதெல்லாம் ஒரு அரமணை ? எங்கப்பன் வீட்டுச் சலதாரைக்குக் காணாது ஓய் ஒம்ம மொத்த அரமணையும் !”

ங்ஙொப்புரானே ! அதே மாதிரி ஒரு சம்பவம் எங்களுக்கு நடக்கப் போகிறது என்று நானோ, பரணியோ, மற்ற மூவருமோ கற்பனையும் செய்திருக்கவில்லை. எங்கள் ஐந்து பேரையும் வரவேற்க, எண்ணற்ற அவலோகிதேஸ்வரர்கள் இதழ்க் கடையில் உறைந்த புன்னகையோடு பாயோன் கோயில் கோபுரங்களில் காத்துக் கிடப்பது தெரியாமல், உண்ட மயக்கத்தில் கண்கள் செருக, இலேசான இளமழைக்கு இடையே வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்...

- பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment