சபரிமலையில் படிபூஜை முன்பதிவு 2033 வரை முடிந்தது....
சபரிமலையில் படிபூஜை நடத்த, 2033 வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இனி படி பூஜைக்கு முன்பதிவு செய்ய, 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
சபரிமலையில் பூஜையானது, 18 படிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ள மலை தேவதைகளை திருப்திபடுத்தும் வகையில் நடக்கிறது.
அனைத்து படிகளிலும் பட்டு விரித்து அதில் தேங்காய், பூக்கள் வைக்கப்பட்டு, குத்து விளக்கேற்றி வைத்த பின், தந்திரி, ஒருமணி நேரம் பூஜை நடத்துவார்.
தொடர்ந்து அனைத்து படிகளிலும் நிவேத்யம் நடைபெறும். இறுதியில் தீபாராதனை நடத்தி, பூஜை நிறைவு பெறும். இது முடிந்ததும் தந்திரிகளும், பூஜாரிகளும் ஸ்ரீகோவிலுக்குள் செல்வர்.
படிபூஜைக்கு இந்த ஆண்டு முதல், தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம், 75 ஆயிரம் ரூபாய். சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் அதிக கட்டணம் இதுவாகும். இதற்கான முன்பதிவு, 2033-ம் ஆண்டு வரை முடிந்து விட்டது. இனி, 2034-க்கு தான் முன்பதிவு செய்ய முடியும். மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், 60 நாட்களில் படிபூஜை கிடையாது. மாத பூஜை காலத்தில் மட்டுமே இந்த பூஜை நடைபெறுகிறது.
இதேபோல உதயாஸ்தமன பூஜையின் முன்பதிவு, 2023-ம் ஆண்டு வரை நிறைவு பெற்றுள்ளது.
Leave a Comment