திருவண்ணாமலை கார்த்திகை தீப கொடியேற்றம்...


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நவம்பர் 30-ஆம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, டிசம்பர் 1-ஆம் தேதி இரவு பிடாரியம்மன் உற்சவமும், டிசம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றன.
டிசம்பர் 3-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுர் லக்கினத்தில் கோயில் தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதன் பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
டிசம்பர் 8-ஆம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகின்றன. டிசம்பர் 9-ஆம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து, இரவு 10 மணி வரை பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
12-ல் தீபத் திருவிழா: டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
3 நாள் தெப்பல் உற்சவம்: தொடர்ந்து, டிசம்பர் 13-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், டிசம்பர் 14-ஆம் தேதி ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 15-ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தீபத் திருவிழாவுக்கான பத்திரிகைக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதன்கிழமை இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு பக்தர்களுக்கு தீபத் திருவிழா பத்திரிகையை விநியோகம் செய்யப்பட்டது.



Leave a Comment