திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

2-ம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

1-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும்.

6-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

7-ம் திருநாளான 6-ந் தேதி கந்த சஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

அன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.



Leave a Comment