கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை!


முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.
இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.
கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.
கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.



Leave a Comment