ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை ....


அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.
முருகனுக்குரிய முக்கிய விரதங்களாக கருதப்படுவது, வெள்ளிக்கிழமை வார விரதம், கார்த்திகை நட்சத்திரம் விரதம் மற்றும் கந்த சஷ்டி விரதம்.
அதில் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.
சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது?
சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் ஒப்பரும் விரதம் என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.
அத்துடன்; விரத முடிவு தினமான சூரன்போரில் முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் செய்யும் காட்சியை தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அதாவது ஆணவம், கன்மம், மாயை என்ற அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.



Leave a Comment