திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு....
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெற்றது. நிறைவு நாளில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை உற்சவம் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்தது. 7ம் நாள் இரவு மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் வலம் வந்தார்.
8ம் நாள் காலை மகா தேரோட்டம் நடந்தது. தேரில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளில் அசைந்தாடி வந்த மலையப்ப சுவாமி தேரை திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர்.
இரவு தசாவதாரங்களில் இறுதியான கல்கி அலங்காரத்துடன் கையில் கத்தி கேடயங்களுடன் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் அன்று அதிகாலை 3மணிக்கு சுப்ரபாத சேவை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சக்கரத்தாழ்வார், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோர் ஊர்வலமாக வந்து வராக சுவாமி கோயிலில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சன சேவை நடந்தது.
இதையடுத்து கோயில் அருகே உள்ள தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் புஷ்கரணியில் புனித நீராடி வழிபட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியின்போது புஷ்கரணியில் நீராடினால் சகல பாவங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை காரணமாக அதிகாலை முதலே குளத்தின் நான்கு கரையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி மாலை பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது.
Leave a Comment