திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கியது....
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் புற்று மண் சேகரிக்கப்பட்டு அதில் நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷ்வ சேனாதிபதி உற்சவர், 4 மாட வீதிகளில் பவனி வந்தார். முதல் நாளான அக்டோபர் 3 ஆம் தேதி மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டு மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரம்மோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர்.
இதைத்தொடர்ந்து 11ம்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொடியேற்றத்தை தொடர்ந்து முதல் உற்சவமாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வருகிறார். 2ம் நாளான அக்டோபர் 4 ஆம் தேதி காலை சிறிய சேஷ வாகன உற்சவம். இரவு அன்னவாகன உற்சவம். 3ம்நாள் காலை சிம்ம வாகன உற்சவம். இரவு முத்துபந்தல் வாகன உற்சவம். 4ம்நாள் 6ம்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருள்கிறார்.
அன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. 5ம்நாள் காலை (7ம்தேதி) மோகினி அலங்கார உற்சவம். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் அன்றிரவு நடக்கிறது. அன்று ஏழுமலையானுக்கு மூலவருக்கும் அணிவிக்கப்படும் மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்கர நாம மாலை ஆரம் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.
6ம்நாள் காலை (8ம்தேதி) அனுமந்த வாகன உற்சவம். இரவு தங்க யானை வாகன உற்சவம். 7ம்நாள் காலை (9ம்தேதி) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 8ம்நாள் காலை (10ம்தேதி) ரத உற்சவம் நடக்கிறது. இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் நாள் காலை (11ம்தேதி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
Leave a Comment