குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்


குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், யூனியன் கவுன்சிலர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தசரா திருவிழாவின் பத்தாம் நாளான அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை வதம் செய்கிறார்.



Leave a Comment