பழனி கோயிலில் விஜயதசமி அம்பு போடும் விழா....
பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமி அம்பு போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, மலைக் கோயிலில் தினமும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளன. பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலும் நவராத்திரி நாள்கள் முழுவதும் பெரியநாயகி அம்மனுக்கும், அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்புவில் போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர், மலைக் கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு, அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும்.
இதனால், மலைக்கோயில் மதியம் 2.30 மணிக்கு மேல் திருக்காப்பிடப்படும். பின்னர், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் வெற்றிவேர் மாலையுடன், அருள்மிகு பெருமாள் சகிதமாக அருள்மிகு மானூர் சுவாமிகள் கோயில் அருகிலுள்ள அருள்மிகு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி, வன்னி மரமாக மாறி நிற்கும் வன்னிகாசுரனை வதை செய்த பின், வேல் மலைக் கோவிலுக்கு புறப்பாடாகும். அதையடுத்து, மலைக் கோயிலில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு, நள்ளிரவு அர்த்தஜாம பூஜை நடத்தப்படும்.
Leave a Comment