தனி ஒருவன் குளிகன்
நல்லது செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததை நேரம் செய்யும் என்று ஒரு வழக்கு உண்டு.
நம் அனைவருக்கும் சாராசரியாக யமகண்டம், ராகுகாலம் பற்றி தெரிந்துயிருக்கும். காலண்டரில் குளிகை நேரம் என்பதை பார்த்திருப்போம். உண்மையில் குளிகை நேரத்தில் ஒரு வேலையைய் செய்யத்தொடங்கினால், அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பார்கள், ஆயினும் குளிகையில் நல்ல விஷயங்கள் தொடங்குவதில்லை அது ஏன்? அதற்கு காரணம் அவரது தந்தை.
குளிகையும் அவரது தந்தையையும் சந்திக்கலாமா?
மண்டோதரிக்கு பிரசவ நேரம். வலியால் துடித்தபடி இருந்தாள் இலங்கையின் மகாராணி. இராவணன் 9 கோள்களையும் அழைத்தான், பிரம்ம தேவரையும் அழைத்து அதிஅற்புதமான நேரத்திலேயும், உலகின் தலைசிறந்த ஜாதக அமைப்போடும் தன் பிள்ளை பிறக்க வேண்டும் என ஆணையிட்டான். அதன்படி நவகிரஹங்கள் இராவணன் இஷ்டப்படி இதுவரை யாருக்கும் அமையாத ஜாதகமாக நிற்க வைக்கப்பட்டனர். பிரம்மதேவரும் ஒரு குறையும் இல்லாத ஜாதகத்தை வடிவமைத்தார்.
ஆனால் நவகிரஹங்களுக்கும், தேவர்களுக்கும் இது மிகவும் வேதனையாக இருந்தது. இனி இராவணேஸ்வரனை அழிக்க முடியாது
என துயரமுற்றனர். அந்த அவஸ்தையினால் சனீஸ்வர பகவான் வியர்த்து வழிந்தார். தன் வியர்வையை எடுத்து எறிந்து கொண்டே இருந்தார். அதே வேளையில் மண்டோதரி அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள்.
தன் பிள்ளையை இனி எவராலும் அழிக்கமுடியாது என்று இராவணன் கர்வமடைந்தான். அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் பிரம்மதேவரோ மிகுந்த நிம்மதியடைந்தார். நவகிரஹங்களை தனியே அழைத்து, சனீஸ்வரனின் மைந்தன் நம்மை காப்பாற்றியுள்ளான் என்றார். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.
பிரம்மனே தொடந்தார், சனி பகவானின் வியர்வை மகனாக அவதரித்துள்ளான். சாதாரணமாக அப்பழுக்கில்லாத ஜாதகத்தை கொண்ட உயிரை நான் படைப்பதில்லை. எனவே நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். ஆனால், சனி பகவானின் மகன் அக்குறையை நிவர்த்தி செய்து விட்டான், 9 கோள்களும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனி ஒருவனாக நின்று, அனைவரின் நற்பலன்களையும் சிதறடித்துவிட்டான். அவனுக்கு குளிகன் எனப் பெயர் இடுகிறேன், என்றார்.
நவகிரஹங்களில் ஒரு இடத்தை தர இயலாது, அதனால் ஒரு நாளில் சில நாழிகைகள் அவனுக்கு தருகிறேன். குளிகனால் கெடுதல் மிகையாக இல்லையென்றாலும், இராவணனின் மகனுடைய அழிவிற்கு உதவியதாலும் சனி பகவானின் மகனாக இருப்பதாலும், குளிகை நேரத்தில் நல்ல விஷயங்களை தொடங்க முடியாது என்றார் பிரம்மர்.
குளிகை நேரத்தில் ஒரு காரியம் தொடங்கினால் அது, தொடரும் என்பார்கள்ஆ. தலால் பெரும் கடனுடையவர்கள் குளிகை நேரத்தில் கடனை அடைக்க முயலுவார்கள்.
இதை தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்கிறார்களோ...
- ரம்யா சுரேஷ்
ரம்யா சுரேஷ் - சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள - sangemahathi@gmail.com
Leave a Comment