திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு 700 சிறப்பு பேருந்துகள்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதிவரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வரும் மெக்கானிக்குகள் ஆகியோரை திருப்பதி மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதிக்கு மொத்தம் 500 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவ விழா நேரத்தில் திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதி மற்றும் திருப்பதி, திருமலையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக 200 அரசு பஸ்கள் வீதம் மொத்தம் 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பாலாஜி, ஏழுகொண்டலு பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், அலிபிரி, லீலா மகால் ஜங்ஷன் ஆகிய இடங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலையில் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment