ஏழுமலையான் கோயிலில் கூடுதல் உண்டியல்


திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், கோயில் வளாகத்தில் கூடுதல் உண்டியல் அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் இதனை தெரிவித்தார். பல கோயில்களுக்கு இந்து தர்ம பிரச்சாரம் சார்பில் மராமத்து பணிகளை செய்ய ஆலோசனை நடத்தப்படும் என்றும், திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவ மனையில் வசதிகள் அதிகரிக்கப் படும் எனவும் கூறினார். ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க உத்தர விடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் ஆலோசனைப்படி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு கூடுதலாக சடாரி, தீர்த்த மையம் அமைக்க ஆலோசனை நடத்தப்படும்என்றும் கூறினார். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உண்டியலில் காணிக்கை செலுத்த கூட்ட நெரிசல் ஏற்படுவதால் தேவைப்படும் இடங்களில் கூடுதல் உண்டியல்கள் அமைக்கப்படும் என்றும் சாம்பசிவ ராவ் கூறினார்.



Leave a Comment