பாம்பன் சுவாமி காவி உடுத்தியது ஏன்?
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இயற் பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் தான் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், இவரது அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்து வருகிறார்கள். அவர் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இளம் வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.
தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுபட விளக்கியுள்ள தவ சீலர் பாம்பன் சுவாமிகள். பொய்யாமையையும்,கொல்லாமையையும் வலியுறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மகான். அவருடைய பாடல்கள் மந்திர சித்தி பெற்றவை. குறிப்பாக சண்முக கவசம், தௌத்தியம், குமாரஸ்தவம் போன்றவை மிகவும் சிறப்புப் பெற்றவை.
பாம்பன் சுவாமிக்கு காவியுடன் ஏற்பட்ட தொடர்பு
பாம்பன் சுவாமிகள் எனப் அனைவராலும் பெரிதும் போற்றப்பெறும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் தோற்றம் காண்பவரை கையெடுத்து கும்பிட வைக்த்கும். இதுகுறித்து ஒரு சுவையான வரலாறும் உண்டு. பாம்பன் சுவாமிகள் பொதுவாக இடுப்பில் வெண் கோவணமும் மேலே போர்த்திக்கொள்ள வெள்ளை ஆடையும் உடுத்தே காணப்படுவார்.
பாம்பன் சுவாமிகள் ஒரு முறை காசியில் உள்ள திருத்தலங்களைத் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார். அங்கு ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் திருமடத்திற்குச் சென்றார். அங்கிருந்த அன்பர்கள் அவரை வரவேற்று வணங்கி, அவர் தங்குவதற்கு அறை அளித்து உபசரித்து மகிழ்ந்தார்கள். பாம்பன் சுவாமிகள் நாள்தோறும் கங்கையில் குளித்து திருத்தலங்களை வணங்கி திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி ஒருநாள் தனது வழிபாட்டினை முடித்து காசித்திருமடத்தில் தம் அறைக்குத் திரும்பியபோது தாம் எப்போதும் அணியும் வெள்ளுடைகள் இல்லாததை அறிந்தார். அப்போது அத்திருமடத்தின் காவியுடுத்திய வயோதிக அன்பர் ஒருவர் பாம்பன் சுவாமிகளின் எதிரே வந்து அவரது இடுப்பில் பொன்னூல் இழையுடன் கூடிய ஒரு காவி உடையினையும் தோளில் ஒரு காவி உடையினையும் அணிவித்து வணங்கினார். பாம்பன் சுவாமிகள் அவரிடம் இது என்ன என வினவிய போது, அவ்வடியார் சுவாமி இது குமரகுருபர சுவாமிகளின் திருமடம், அவர் பெயரைத் தாங்கிய நீங்கள் இந்த உடையை ஏற்க வேண்டும் இதனைச் செய்யத் திருவருளே என்னைத் தூண்டியது என்றார். பாம்பன் சுவாமிகளும் அச்சொல் ஸ்ரீகுமரகுருபரருடைய ஆணையே என்று எண்ணி மனத்தால் வணங்கி அன்று முதல் சித்தியடையும்வரையிலும் அவ்வாறே காட்சி தந்தார். இன்று நம் கண்முன்னே காவியுடை போர்த்தி காட்சிதரும் அத்திருவுரு ஸ்ரீகுமரகுருபரசுவாமிகளின் திருவருளினால் ஸ்ரீகாசித்திருமடத்தில் கிடைத்த தோற்றமாகும்.
Leave a Comment