உலகின் மிகப்பெரிய ஆலயம் - பாகம் 9
உணவகத்தை விட்டு வெளியே வந்து, அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அமெரிக்கருக்கு அமெரிக்காவில் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்களாம். ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டும் விடுப்பில் கம்போடியா வந்து இந்த ஊர் மனைவியோடு குடும்பம் நடத்தி விட்டுச் செல்கிறாராம். இது கம்போடியாவில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. கம்போடியாவில் மட்டுமல்ல, தாய்லந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.
இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோதும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேங்காக் சென்றிருந்தபோது, விமான நிலையத்திலேயே வெள்ளைக்காரர்கள் (பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளூர்ப் பெண்களோடு அறிமுகமாகி ஊர் சுற்றுவதை சகஜமாகக் காண முடிந்தது. அந்த நாட்டுக்குத் தனியாக வருபவர்கள், உள்ளூரில் துணையைத் தேடிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் அப்போது புரிந்து கொண்டேன். பெரும்பாலும் அப்படித்தான்.
ஆனால், வெள்ளைக்காரக் கணவருக்காகவே இந்த நாடுகளில் காத்திருக்கும் பருவகால மனைவிகளும் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். புதிய இளம் மனைவிக்கான முழுச் செலவையும் வெளிநாட்டுக் கணவர் ஏற்றுக் கொள்கிறார். மிகப் பெரும்பாலோர் தரமான வீடும் வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.
இளம் மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கே இந்த வெள்ளைக்கார முதிர் மாப்பிள்ளைகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்களாம். தாத்தா, பாட்டி உட்பட... இவ்வாறு வயதான வெள்ளைக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கப்படுவது குறித்து இளம்பெண்களுக்கு எந்த மனக்குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே அதை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.
அந்த நாட்டு வறுமைச் சூழல் அவர்களை அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்தக் கதை தெரிந்த பின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய எங்கள் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க ?
உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரிய பேரங்காடியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து உடனே தூங்கி விட்டோம். நாளைக் காலையில், கருக்கலில் சென்று அங்கோர் வாட் ஆலயத்தைக் காணத் தீர்மானித்திருந்தோம். ஒரு நாள்தான் இருக்கிறது. முழுமையாகப் பார்த்துவிட முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம். அங்கோர் வாட்டுக்குப் பிறகு பாயோன் கோயில் பார்த்துவிட்டு மாலையே புனோம்பென் புறப்படுவதாகத் திட்டம்.
அதிகாலையில் பல்விளக்கித் தயாராக இருந்தோம். குளிக்கவில்லை. புலரியில் ஆலயத்தைப் பார்த்துப் படங்கள் கொஞ்சம் எடுத்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து குளித்துக் கிளம்பிக் கோயிலை விஸ்தாரமாய்ப் பார்ப்பதாக ஏற்பாடு. டாண் எனக் காலை ஐந்து மணிக்கு ஓட்டுநர் ரா வந்துவிட்டார். பொழுது விடியும் நேரத்தில் எந்த ஊரும் அழகுதான்.
எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். அங்கோர் வாட் ஆலய வளாகத்துக்குச் செல்ல சியாம் ரீப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழைவுச் சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு நாள் சுற்றிப் பார்க்க, இரண்டு நாள் பார்க்க, ஒரு வாரம், ஒரு மாதம், ஆறு மாதம் தங்கி ஆய்வு செய்ய எனத் தனித்தனியாகக் கட்டணம். நாங்கள் ஒருநாள் நுழைவுச் சீட்டு சூரியோதய வேளைக்குச் சேர்த்து வாங்கினோம். 20 அமெரிக்க டாலர் வழக்கம்போல்.
நுழைவுச் சீட்டு ஒவ்வொருவராக, தனித்தனியேதான் எடுக்க வேண்டும். அங்கேயே உள்ள கேமராவை நம்மைப் பார்க்கச் சொல்லிப் படமெடுத்து அதை நுழைவுச் சீட்டில் பதித்து விடுகிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. “கோளாறுக்காரப் பயபுள்ளைக”தான் என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூரில் கூட இந்தப் பழக்கமில்லை. பதியப்பட்ட படத்தைப் பார்த்து எனக்கே பயமாகிவிட்டது. குளிக்காமல் கொள்ளாமல் ஙே என்று முழித்துக் கொண்டிருந்தேன் படத்தில்.
சியாம் ரீப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆலய வளாகத்திற்கு நம்ம ஊர் ஆட்டோபோல சின்னச் சின்ன வாகனங்கள் அழைத்துச் செல்கின்றன. எங்களிடம் வேன் இருந்ததால் அதிலேயே சென்றோம். எனக்கு மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கியது. கடவுளே ! நிஜமாகவே நான் அங்கோர் வாட்டைப் பார்க்கப் போகிறேனா ? இது நிஜம்தானா ? வேன் செல்லும் வேகத்தைத் தாண்டி என் ஆவல் பறந்தது.
வாழ்நாள் கனவு ஒன்று இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது என்ற பதற்றம் என்னை நிலையழியச் செய்தது. நண்பர்களோடு அதிகம் பேசவில்லை. எனக்குள் மூழ்கிப் போனேன். எத்தனை ஆண்டுகள் நினைத்து நினைத்து ஏங்கிய இடம் ?
சிங்கப்பூருக்கு வந்திருக்காவிட்டால் இங்கே என்னால் வந்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா? அதற்கான பொருளாதார வசதி இருந்திருக்குமா? நான் சிங்கப்பூர் வருவதற்குக் காரணமாக இருந்த ஆருயிர்த் தோழன் அசோகன், சம்பத், வீரமணி உள்ளிட்ட நண்பர்களை மனத்துக்குள் நினைத்துப் பார்த்து நன்றி சொன்னேன். அசோகன் இந்த பூமியிலேயே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசநோயால் காலமாகிவிட்டான். அசோகா நீ எங்காவது பக்கத்தில் இருக்கிறாயாடா ? இருந்தால் உன்னைத் தழுவிக் கொள்கிறேனடா..
இதோ உன் தோழன் அங்கோர் வாட் பார்க்கப் போகிறான் ! காரைக்காலில் நீ எடுத்துக் கொடுத்த விசா மூலம் சிங்கப்பூர் வந்தவன், சிறுவயதிலிருந்து கனவு கண்ட இடத்தை நேரில் பார்க்கப் போகிறான். மானசீகமாக உன்னோடு இந்த இடத்தைப் பார்க்கப் போகிறேனடா..
வெளியே இன்னும் விடிந்திருக்கவில்லை. ஆலயத்திற்கு எதிரே எங்களை இறக்கிவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு ரா போய்விட்டார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய், அகழியைக் கடப்பதற்காக உள்ள பாதையில் சென்றோம். நன்கு மழை பெய்து வெறித்திருந்ததால், பாசி படிந்த சுவர்கள் மழைநீரில் ஊறிப் பேரழகோடு திகழ்ந்தன. ஆலயங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.
ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் வழக்கத்தை விடச் சற்றே உயரமான படிகள். வெளிச்சம் லேசாகத்தான் வரத் தொடங்கியிருந்தது என்றாலும், நன்கு வியர்த்தது.
அகழியைக் கடக்குமிடத்திலிருந்து உள்ளே இருக்கும் ஆலய முகடுகள் தெரியவில்லை. முதலில் உள்ள மூன்று மொட்டைக் கோபுரங்கள்தான் தெரிந்தன. அதற்குப் பின்னால் வெகுதொலைவில் இருக்கின்றன ஐந்து மேருக்களும். அகழிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட வாலுடைய ஏழு தலை நாகங்களும் அவற்றின் முடிவில், கலிங்கப் பேரரசின் சின்னமான சிங்கமும் இருந்தன.
பல இடங்களில் ஏழு தலை நாகங்களின் தலை உடைந்து அதை சிமெண்ட்டால் மாற்றிக் கட்டியிருந்ததைக் கண்டோம். நடைபாதைக் கற்களின்மீது ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடந்தது. முதல் படிக்கட்டை ஏறி மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் புலரத் தொடங்கியிருந்த நீலவானப் பின்னணியில் ஆலய முகடுகள் விளிம்பு ரூபமாய்த் தெரிந்தன. படிக்கட்டில் ஏறி கல்நிலைச் சட்டத்துக்குள் அந்த முகடுகளை ஓர் ஓவியம்போலப் பார்த்தபோது மெல்லிய இசை கேட்பது போலிருந்தது எனக்கு. தாஜ்மகாலைப் பார்த்த போதும் இப்படித்தான் உணர்ந்தேன்.
மொட்டைக் கோபுரத் தளத்திலேயே நின்று சற்று நேரம் ஆலயத்தை ரசித்தோம். கேமராவில் படம் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வளவாக வெளிச்சம் வரவில்லை. ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஏராளமான பனைமரங்கள் நின்றிருந்தன. ஐந்து மேருக்களும் அடங்கக்கூடிய படங்களில் முகடுகளின் இருபக்கங்களிலும், கேரளக் கோயில் திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்து பிடிப்பார்களே.. அலங்கார வேலைப்பாடு மிக்க இரண்டு பெரிய வட்டங்கள்.. அதுபோல் உயரமான இரண்டு பனைமரங்கள் நிற்பதைப் பார்க்கலாம்.
நாங்கள் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயணிகள் சாரி சாரியாக உள்ளே செல்லத் தொடங்கினர். நாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பெரிதாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. தூண்களில் அப்சரஸ் நடனமணிகள் பல நிலைகளில் இருந்தனர். சில படங்கள் எடுத்துவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினோம். மேரு நாங்கள் நெருங்க நெருங்க எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டே பெரிதாகத் தொடங்கியது.
இணைப்புப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடிந்த இரண்டு மண்டபங்கள் இருந்தன. அவை முழுமையாக இருந்தால் கூட இவ்வளவு அழகும் அமானுஷ்யமும் அவற்றுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவை அக்கால நூலகங்களாம். பின்னர் வந்த வழிகாட்டி சொன்னார். ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே !..
இப்போது நன்கு விடிந்து விட்டிருந்தது. ஆலயம் மேற்குப் பார்த்தது என்பதால், சூரியக் கிரணங்கள் மேருக்களுக்குப் பின்னாலிருந்து எழும். மசமசவெனப் பரவிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தை அடைந்தது. மேருவை நோக்கிய பாதையின் இரண்டு புறங்களிலும் சின்னக் குளங்கள் உள்ளன. அவற்றில் இடப்பக்கமாக உள்ள குளத்தில் தண்ணீர் நிறையவே இருந்தது. அதன் கரையில்போய் நாங்கள் நின்று கொண்டோம்.
ஆலயத்தின் ஐந்து முகடுகளும் சுற்றியிருந்த மதில் சுவரோடு சேர்ந்திருந்த மொட்டைக் கோபுரங்களோடு குளத்து நீரில் எதிரொளித்தன. ஆலயத்தையும் அதன் பிரதிபலிப்பையும் ஒருசேரக் காண்பது இனிமையாக இருந்தது. சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் இப்படித்தான் வடக்குக் கோபுரம் அழகாகப் பிரதிபலிக்கும். காணத் திகட்டாத காட்சி.
கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏறியது. அங்கே அந்த அனுபவத்தைச் சிதைப்பதற்கென்றே சிறு வியாபாரிகள் கூட்டமொன்று இருக்கிறது. காஃபி, தேநீர், நொறுக்குத் தீனி, காலை பசியாற என்று என்னென்னவோ விற்கிறார்கள். ஆனால் நம்மை வற்புறுத்தவில்லை வாங்கச் சொல்லி. அதுவரை பரவாயில்லை. இருந்தாலும் சளசளவெனப் பேசிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவர்கள் அலைவது அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பதாகவே பட்டது எனக்கு.
எத்தனை ஆண்டுகளாக இந்த ஆலயம் நிற்கிறது? என்னென்ன அரசியல் மாற்றங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இது மௌன சாட்சியாய்ப் பார்த்திருக்கும்? ஆலயத்தின் முன்புறத்திலிருந்து சூரியக் கிரணங்கள் விழுந்து கோபுரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் துலக்கம் பெறுவது ஒருவகை. ஆனால் இங்கோ ஒளி பின்னால் இருந்து எழுவது ஆலய விளிம்புகளை ஒளிரச் செய்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
தாஜ்மகாலில் அதன் நுணுக்கமான வேலைப்பாடும் எழிலும் நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இங்கே முதலில் கண்ணுக்குத் தெரிவது இதன் பிரமாண்டமும் ஒத்திசைவும்தான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் தூண்கள். ஆங்காங்கே கோபுரங்கள். எல்லாவற்றையும் சரடுபோல் இணைக்கும் சாளரங்கள். அவற்றை மூடிய கற்பாளங்கள். அங்கோர் குழும நினைவுச் சின்னங்களில் இதுவே தலையாயது. ஆகப் பெரியது. முழுமையாக இன்று கிடைக்கக் கூடியது.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு அங்கு எடுத்த படங்களை, ஓவியரான நண்பர் பாஸ்கரிடம் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவிய ஞானமெல்லாம் கிடையாது.
பிக்காசோ ஓவியம் வந்திருக்கிறதே என்று பார்க்கப் போனேன். அப்போது பாஸ்கர் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கிருந்த ஓர் ஐரோப்பிய ஓவியத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அது அழகாய் இருப்பதாக நான் சொன்னபோது பாஸ்கர் அந்த ஓவியரின் திறமையை உணரச் செய்யும் மற்ற அம்சங்களை எடுத்துக் காட்டினார். ஒவ்வொன்றையும் சமன்படுத்தும் வகையில், வண்ணச் சேர்க்கை ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்ததைச் சுட்டினார்.
ஓர் ஓவியராக அவர் அந்தப் படைப்பைச் சிலாகித்தது அதன் சமநிலையை. அதேபோல், அங்கோர் வாட் ஆலயம் எல்லாக் கோணத்திலும் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. இடப்பக்கம் ஒன்றிருந்தால் உடனே வலப்பக்கமும் அதே போன்ற ஒன்று சமன்படுத்துகிறது. இது விரிந்து விரிந்து மிகப் பெரிய ஒத்திசைவை உண்டாக்குகிறது. இதன் பிரமாண்டம், பேரழகு எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத் தூண்களை நினைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற ஒத்திசைவு எப்போதுமே அழகுதான் கட்டடக் கலையில். வரிசை வரிசையாக நிற்கும் தூண்களுக்கு இடையே ஒருவரை நிற்க வைத்துப் படம் எடுத்தால் அதில் ஓர் அழகு கூடிவரும். அது இதனால்தான்.
இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கண்களைத் திருப்பித் திருப்பி ஆசை தீர அங்கோர் வாட்டின் அழகை அள்ளிப் பருகினோம். இந்தக் காலை நேர இதமான சூழலை நினைவுக்குள் பொதிந்து வைக்கப் படமும் எடுத்துக் கொண்டோம். விடுதிக்குச் சென்று குளித்து, பசியாறித் திரும்புவோம் என்று புறப்பட்டோம். வழியில் அவ்வப்போது நின்று ஆலயத்தைத் திரும்பிப் பார்ப்போம். இன்னும் பல இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதில்களுக்கு மேல், மொட்டைக் கோபுரங்களுக்கு மேல் என்று பிளாஸ்டிக் கூரையமைத்துப் பல நிபுணர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது இப்போதைக்கு முடியாத செயலாக இருக்க வேண்டும்.
ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடையாளங்கண்டு உரிய இடத்தில் பொருத்த வேண்டும். எப்படி அந்தந்தக் கற்களுக்கு உரிய இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்? ஆச்சர்யம்தான். ஆனால், அவர்கள் அதற்கெனப் பயிற்சி எடுத்திருப்பார்களாக இருக்கும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை, இந்தியத் தொல்லியல் துறை இப்படித்தான் புதுப்பித்தது. ஒவ்வொரு கல்லையும் திசை, வரிசை, மேலிருந்து கீழ் எனக் கணக்கிட்டுப் பிரித்து உரிய முறையில் மீண்டும் அடுக்கியிருந்ததைக் கண்ணால் பார்த்தேன். இப்போதும் தாராசுரம் மதில் சுவரில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
அதுபோல் அங்கோர் வாட் ஆலயம் 20, 30 ஆண்டுகள் கழித்து சீரமைப்புப் பணிகள் முடியும்போது புதுக் கோணத்தில் வடிவத்தில் இருக்கலாம். யார் கண்டது? மனித மூளையின் ஆற்றலுக்கு ஏது இணை?
- பொன். மகாலிங்கம்
சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com
Leave a Comment