ராம நாமம் யாருக்கு சொந்தம்?


இந்த தலைப்பை கண்டவுடன், நம் மனதுக்கு வருபவர்கள் ஹனுமாரும், சீதையும் தான். அல்லது சொல்பவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றும், ஆனால் உண்மையில் அதற்கு சொந்தக்காரரை நாம் சந்திப்போமா, வாருங்கள்.
 
இராமாயணம் எழுதி முடித்து சில காலம் கழித்து மனிதர்கள்,தேவர்கள்,ரிஷிகளுக்கிடையே ஒரு வாக்குவாதம் எழுந்தது. இராமாயணமும் அதில் உள்ள ஒரு லட்சம் ராம நாமமும் யாருடையது என்று. மனிதர்கள் ராமாவதாரமே மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கத் தான் ஆதலால், இராமாயணம் மனிதர்களுக்கே சொந்தம் என்றனர். தேவர்களோ உலகில் அரிதான விஷயங்கள் அனைத்தும் தேவர்களுக்கே உரியது என்று குரல் எழுப்பினர். ரிஷிகளோ ராமாவதாரத்தின் போது வனவாசத்தில் ராமர் தங்கியது ரிஷிகளுடன்தான், ஆதலால் இராமாயணமும் அதில்  உள்ள ஒரு லட்சம் ராம  நாமமும் தங்களுக்கே சொந்தம் என வாதிட்டனர்.
 
இந்த வழக்கு நாரதரிடம் சென்றது. அவரோ இதற்கு தக்க நீதிபதி உலகின் தந்தையான சிவபெருமானே, எனவே அவரிடமே செல்வோம் என்றார். வழக்கை விசாரித்த நீலகண்டரோ, ஒரு லட்சம் ராம நாமத்தை சரிவிகிதமாக பிரித்தார். அதன்படி 30000,30000,30000 ஆக பிரித்தார்.
மிச்சம் இருந்த 10000த்தை 3000,3000,3000, ஆக பிரித்தார். மீதி இருந்த 1000த்தை 300,300,300 ஆகப் பிரித்தார். மீதமிருந்த 100ஐ 30,30,30 ஆக பிரித்தார். மிச்சமிருந்த 10ஐ 3,3,3 ஆக பிரித்தார். 
 
இப்போது எஞ்சியிருந்த ராமா என்ற‌ ஒற்றை வார்த்தையை, இந்த வழக்கிற்கு நீதிபதியாக இருந்த தனக்கு தருமாறு கேட்டார். அதற்கு
அனைவரும்  சம்மதித்தனர். அதன்படி ராம என்ற சொல்லுடன் ஒரு லட்சம் ராம நாமமும் சிவனையே சென்றடைந்தது. எனவே ராம நாமத்தை கூறும்போது அதற்கு சொந்தமான சிவனின் அருளையும் நாம் பெருகிறோம். அரியும் சிவனும் ஒன்று என்று உணர்த்திய அழகிய நிகழ்வு இது.
 
- ரம்யா சுரேஷ்
-----------------------------------------------------------------------------
 
ரம்யா சுரேஷ் - சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள - sangemahathi@gmail.com  



Leave a Comment