மார்க்கின் மனம்கவர்ந்த இந்திய கோவில்


பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ஃபேஸ்புக் நிறுவனர் Mark zuckerberg-ஐ சந்தித்தது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் அப்போது தனது மனம்கவர்ந்த இந்திய கோவில் பற்றி மார்க் நம்ம பிரதமரிடம் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா..

ஃபேஸ்புக் தொடங்கிய காலகட்டத்தில் மார்க் அடுத்தடுத்து நிறைய சிக்கல்களை சந்தித்தாராம். அப்போது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுறுத்தியபடி இந்தியாவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று வந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பல முன்னேற்றங்களை சந்தித்ததாக மார்க் மோடியிடம் கூறியிருக்கிறார். 

மார்க்கின் மனதிற்கு இதமளித்த அந்த ஆசிரமம் உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. அதன் பெயர் 'கைஞ்சி தாம்’. இங்கு ஒரு அனுமன் கோவிலும் உள்ளது. 2 நாட்கள் இந்த ஆசிரமத்தில் தங்கியும் இருந்திருக்கிறார் மார்க் சூக்கர்பெர்க்.

1970ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இந்த ஆசிரமத்தோடு இணைந்திருக்கும் கோவிலுக்கு சென்று அனுமனை தரிசித்த பிறகு தன் வாழ்வில் பல முன்னேற்றங்களை சந்தித்தாராம்.

உத்தர்கண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான நைனிடாலில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் குமோன் மலையில் அமைந்திருக்கிறது கைஞ்சி தாம்.

இந்த ஆசிரமத்தை நிறுவியவர் Neem Karoli Baba. இவர் இப்போது உயிருடன் இல்லை. 1973ஆம் ஆண்டு சமாதி அடைந்துவிட்டார். 

1973ஆம் ஆண்டு  Neem Karoli Baba மறைந்த பிறகு அவருக்கு ஆசிரமத்தின் உள்ளேயே கோவில் அமைக்கப்பட்டு அவருடைய சிலை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

யார் கைஞ்சிதாம் செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மூத்த சாது ஒருவரிடம் சான்று பெற்றுச் சென்றால் 3 நாட்கள் அந்த ஆசிரமத்தில் தங்கவும் முடியும்.

ஆன்மீக தலைவர்கள் Ma Jaya, Ram Dass, இசையமைப்பாளர்கள் Jai Uttal and Krishna Das, மனிதநேய ஆர்வலர் Larry Brilliant, எழுத்தாளர் Yvette Rosser and Daniel Goleman  ஆகியோர் இவருடைய தீவிர பக்தர்கள். வருடத்தின் பல மாதங்கள் குளிர் காரணமாக மூடப்பட்டிருக்கும் இந்த ஆசிரமம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே திறந்திருக்கும். ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்சும் இந்த ஆசிரமத்தின் ஸ்டார் பக்தர்களில் ஒருவர்.

மார்க்கிற்கு தொழில் வளர்ச்சி கொடுத்த இந்த ஆசிரமத்திற்கு நீங்களும் முடிந்தால் ஒரு தடவை போய் வாருங்கள்…

- ஹேமா ராக்கேஷ்

 

 

தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.



Leave a Comment