யாதுமாகி நின்று அருளும் சிறுவாச்சூர் மதுர காளி


யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மை எல்லாம் - நிந்தன்

செயல்கள் அன்றி இல்லை.

 - மகாகவி பாரதி

 

ஆதிபராசக்தியே க்ரியாசக்தி (துர்கை), இச்சாசக்தி (லக்ஷ்மி), ஞானசக்தியாய் (சரஸ்வதி) தன் பிள்ளைகளுக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.துர்கா தேவி அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்கிறாள் . அதில் ஒரு அம்சம்.  தான் காளி. இவளின் புறத்தோற்றம் அச்சம் தரக் கூடியதாக இருந்தாலும் அரவணைக்கும் தாயவள் .அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், 'திகம்பரி ஆவாள் . சக்தி வழிபாட்டு முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக இருக்கிறாள் . 

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத சக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து,மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

காளியே பின்பு 'பத்ரகாளி'யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள்.'பத்ர' என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள். கோப வடிவமாக இருக்கும் அன்னையை சாந்தம்  செய்தால் உடனே இளகி அருள்பாலிப்பாள் .

கல்கத்தா  நகரில் உள்ள காளிக் கோயிலை போலவே  தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில்,மதுரகாளியம்மன்  கோவில் இன்றும் பல பக்தர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு ஸ்தலமாக சிறந்து விளங்குகிறது.

பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில்,திங்கள்  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கிறது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள  கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டாவதை உணர முடியும் .

ஸ்தல வரலாறு 

ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம்  ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுர காளியம்மன் .

செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகை சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவருக்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் வந்ததாகவும் அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானாள் என்பது செவிவழிச் செய்தி.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் நம்பப்படுகின்றது. சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

 

கோவில் திறக்கும் நேரம் 

சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.

 

சிறப்பு அம்சம்

மதுரகாளி  மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள்.

பலனளிக்கும் பிராத்தனைகள்

செல்லி அம்மனிடம்  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ,  குழந்தை பிறந்தால் "பால் முடி" கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதம் முடிவடையும் முன்  சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்

அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி,சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன

தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை மனமுருகி வழிபட்டு நன்மை அடைவோமாக.

மதுரகாளியம்மன் ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளம் :

http://siruvachurmadhurakaliamman.tnhrce.in/index.html

- ப .கோமதி சுரேஷ்



Leave a Comment