விஜயதசமி அ,ஆ... எழுதும் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு அ, ஆ.. எழுத கற்று கொடுத்தனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சக்தியை 3 நாள் துர்க்கையாகவும், 3 நாள் லெட்சுமியாகவும், 3 நாள் சரஸ்வதியாகவும் வழிபடுவார்கள். 9வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 10வது நாளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரியவர்கள் மடியில் அமர செய்து, அரிசியில் குழந்தைகளுக்கு எழுத்து எழுத கற்று கொடுத்தனர். முதலில் அ, ஆ.. எழுத செய்தனர். ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமியில் ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் கைகூடும் என்பது நம்பிக்கை ஆகும். இதே போல் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளில் நேற்று குழந்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம்.சரஸ்வதி பூஜையன்று பள்ளியில் சேர்ந்தால் தன் குழந்தை நன்றாகப் படிக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரின்நம்பிக்கையும் கூட.
Leave a Comment