ஆயக் கலைகளின் நாயகியை போற்றுவோம்


 

நம்முடைய இந்து மதத்தில்,  கல்விக்குரிய தெய்வமாக சரஸ்வதியைப் போற்றுகிறோம். கலைமகள், சியாமளா என்றெல்லாம் அழைக்கப்படும் கலைவாணி முப்பெருந்தேவியரில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆயகலைகள் 64ல் கல்வி மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் அதிபதி கலைமகள்.

வெண்ணிறத் தாமரைப் பூவில் உறைபவளான  கலைமகளுக்குரிய வாகனம் வெண்ணிறப் பறவையான அன்னம். அவள் உடுத்தும் ஆடையும் பளிங்கு நிற தூய  வெள்ளைப் புடவை. அழகுத் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் முத்துக்களால் ஆன ஜபமாலையும் வெள்ளை. சரஸ்வதியை மனக்கண்ணில் நிறுத்தி காணும் போது தூய்மைக்கு இலக்கணமாகத் திகழும் வெள்ளை நிறம் தான் நம் உள்ளத்தை நிறைக்கும். இதன் தாத்பரியம் எந்த ஒரு கலையில் நாம் சிறந்து விளங்க வேண்டுமானாலும், நம் உள்ளம் தூய்மையாக  இருக்கவேண்டும் என்பதே. உள்ள அர்ப்பணிப்போடு, கலையை கற்பிப்பவர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்காக தான் ,வெண்மை நிறத்தை சரஸ்வதிக்குரியதாக வைத்தனர். வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும் வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு தான் வேண்டிய ஞானத்தை வாரி வழங்குகிறாள்.

சரஸ்வதிதேவி என்றதும்,வெண்மை நிறத்திற்கு அடுத்து அவள்  கையில் இருக்கும் வீணை தான் நம் நினைவிற்கு வரும்.  கல்விக்கு எல்லை என்பதே கிடையாது. மேலும் கல்வியின் சிறப்பே, எடுக்க எடுக்க ஊறும் ஊற்றைப் போல அடுத்தவர்க்கு சொல்லி கொடுக்க கொடுக்க கற்பிப்பவர்களுக்கும் ஞானம் வளரும்.  எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள விஜயதசமி நன்னாளே சிறந்தது. சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபட கலைகள் வசப்படும்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி பல நாமங்களால் போற்றப்படுகிறாள். பாரதி , சரஸ்வதி, சாரதா தேவி, ஹம்சவாகினி, ஜகதீக்யாதா,மகேஸ்வரி,கௌமாரி, பிரம்மச்சாரிணி, வித்யதாத்ரிணி,வரதாயினி,ருத்ரகண்டா,புவனேஸ்வரி.

வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

                                                                         

 

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

 

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

 

தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே! கல்வித் தொடக்கத்தை செய்கிறேன். அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

 

சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

 

‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே

பீதவர்ணாயை தீமஹி தன்னோ

பிராம்ஹீ ப்ரசோதயாத்’

பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக.

சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.



Leave a Comment