ஆற்றல் தரும் கன்யா பூஜை


 

நவராத்திரி நன்னாளில் ,அன்னை ஆதி பராசக்தியின் அருளை பெற செய்ய வேண்டிய பூஜைகளில்  கன்யா பூஜையும் ஒன்று.  அதாவது பெண் குழந்தைகளை பாலா திரிபுர சுந்தரி அம்மனாக பாவித்து பூஜை செய்வது. இதற்கான வயது வரைமுறையும் உண்டு. இந்த பூஜையில் ,இரண்டு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகளையே கன்னிகையாக அமர்த்தி கன்யா பூஜை செய்யப்பட வேண்டும்.இந்தப் பூஜைக்கு ஒரு வீட்டு குழந்தைகளைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை. எப்படிப்பட்ட குழந்தைகளாவும் இருக்கலாம்.

ப்ராஹ்மணீ ஸர்வ கார்யார்த்தே ஜயார்த்தே ந்ருப வம்சஜாம்.

லாபார்த்தே வைஸ்ய வம்சோத்தாம்  ஸுதார்த்தே துரீய வம்சஜாம்.

தாருணே சாந்த்ய ஜாதாநாம் பூஜயேத் விதிநா நர : என்கிறது ஒரு ஸ்லோகம்.

                                   

இதன் பொருள் , வேதம் கற்று தூய்மையான வாழ்க்கை வாழும் அந்தணர் குலத்தில் பிறந்த குழந்தைகளை பூஜை செய்தால் அனைத்து கார்ய சித்திகளையும் அடையலாம். நீதியுடன் மக்களை வழிநடத்தும் அரச குலத்தினர் மற்றும் அரசாங்க உயர் பதவி வகிப்பவரின் குழந்தைகளை பூஜை செய்வதால் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றியை அடையலாம். நேர்மையான வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் குழந்தைகளை பூஜை செய்வதால் தொழிலில் மிகப் பெரிய லாபத்தையடைந்து செல்வந்தராக ஆகலாம். நம்பிக்கையுடன் செயலாற்றும் வேலைக்காரர்களின் குழந்தைகளை பூஜை செய்வதால் குடும்ப வம்ச விருத்தியை அடையலாம்.

எனவே குழந்தைகளில் பேதம் இல்லை. அனைவரும் ஜெகன்மாதாவின் குழந்தைகளே! ஆகவே கன்யா பூஜை செய்ய சின்னஞ்சிறிய குழந்தைகள்தான் தேவையே தவிர பாகுபாடுகள் பார்க்கத் தேவையில்லை. எந்த குழந்தையையும் பூஜை செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.

சரி இந்த கன்யா பூஜையை  எப்படி செய்யலாம்.

பூஜையை செய்வதற்காக முதலில்,இல்லத்தை தூய்மைபடுத்தி கோலமிட வேண்டும்.  வீட்டில் நாம் வணங்கும் ஸ்வாமி படங்களைப்  பூக்களால் அலங்கரித்து தீபம் ஏற்றி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். 1 3 5 7 9 என்கிற ஒற்றைப்படையில் வரிசையில் பெண்களை கன்யா பூஜைக்கு  அழைக்கப்பட வேண்டும்.

 பூஜைக்காக அழைக்கப்படும் குழந்தைகளை நல்ல முறையில் வரவேற்பு கொடுத்து, அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து பாத பூஜைசெய்ய வேண்டும். குங்கும சந்தனம் குடுத்து, அவர்களை கோலமிட்ட மனைப்பலகையில் கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும் அதன்பிறகு அவர்களுக்கு நலங்கு இட்டு பூ மாலை சாற்றி, வாசனை மலர்களால் அன்னை பராசக்தியாக பாவித்து அர்ச்சிக்க வேண்டும்.  பிறகு தூபம்  தீபம் காட்டி பிரசாதமாக பாயசம் குடுத்து பருக சொல்ல வேண்டும்.பின்னர்   கண்ணாடி  சீப்பு கண் மை  ரிப்பன் வளையல்  சாந்து மஞ்சள் குங்குமம்போன்ற மங்களப் பொருட்களோடு, வெற்றிலை பாக்கு புஷ்பம்  பாவாடை சட்டை மற்றும் தட்சணையை  ஒரு தட்டில் வைத்து ,நமஸ்கரித்து தீபாராதனை காட்டி மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும் அவர்கள் கையில் மஞ்சள் அட்சதை குடுத்து ஆசீர்வதிக்க சொல்ல வேண்டும் பிறகு அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி அறுசுவை உணவு கொடுத்து மீண்டும் அவர்களை நமஸ்கரித்து நல்ல முறையில் வழி அனுப்ப வேண்டும்.

இதுவே கன்யா பூஜை. இப்பூஜை  நவராத்திரி நாட்களில் இதை செய்பவர்கள் அம்பிகையின்  அருளால் அரிய செயல்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.



Leave a Comment