ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தரும் சுவாசினி பூஜை
நலம் தரும் நவராத்திரி நாட்களில் அன்னைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பூஜை செய்கிறோமோ ,அந்த அளவிற்கு நவராத்திரி பூஜைகளில் மிக மிக முக்கியமானது சுவாசினி பூஜையாகும். சுவாசினி என்பவள் யார்? 50வயதை கடந்த பெண்களைத்தான் சுவாசினி என்பார்கள். அதிலும் குறிப்பாக மாதத்தீட்டு இல்லாதவர்கள்தான் சுவாசினி. இப்படிப்பட்ட பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை அம்மனாக பாவித்து பூஜை செய்து சிறப்பு செய்வதுதான் சுவாசினி பூஜை எனப்படும்.
சுவாசினி வழிபாடு செய்பவர்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் என்கிறது தேசி பாகவதம். ஒருமுறை நவராத்திரி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, லலிதா பரமேஸ்வரியே பக்தர்களின் பூஜைகள் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க பூவுலகம் வந்தாள்.
ஏழைப்பெண்ணுருவில் சென்ற தேவியை யாருமே கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். ஆனாலும், வறுமையில் இருந்த ஒரு பெண் மட்டும் பழையசாதமும், பயிறு சுண்டலும் தந்தாள். அதற்கு மறுநாள் கழுத்து நிறைய பொன் ஆபரணங்களை அணிந்தபடி பட்டுப்புடவையோடு சென்றாள் தேவி.
முன் தினம் தனக்கு பழைய சாதம் கொடுத்த ஏழைப்பெண் வீட்டிற்கு சென்றாள். எல்லா பெண்களையும் அழைத்து இறைவழிபாட்டில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கூடாது. மனிதர்களுக்கு உரிய எட்டு குணங்களை அறிவுருத்தவே எட்டு தினங்களும் வந்து , ஒன்பதாம் நாள் காட்சி தந்து செல்கிறேன் என்று கூறி மறைந்தாள்.
கோலம் போட்ட மனை மீது சுவாசினி பெண்களை அமர செய்ய வேண்டும். அவர்களை அம்பிகையாக பாவித்து அர்ச்சனை செய்து நாமவளிகளை சொல்ல வேண்டும். அனைத்து வகை பூஜைகளும் முடிந்த பிறகு புடவை, ரவிக்கை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை சுவாசினிகளுக்கு தானம் கொடுக்க வேண்டும்.
அப்போது இந்த பூஜையை மேற்கொள்ளும் தம்பதிகள் சுவாசினிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு சுவாசினிகளுக்கு அன்னமிடவேண்டும். இந்த சுவாசினி பூஜையை நவராத்திரி 9 நாட்களில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். சுவாசினிகளுக்கு அணிவிக்கப்படும் மாலையை திருமணமாகாத பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
லலிதா விரதமும் சுவாசினி பூஜையும் செய்கிற வீட்டுக்கு விரும்பி வந்து அருள்கிறேன் என்று தேவியே கூறியருளுகிறாள். நவராத்திரி பூஜையில் எல்லாப் பெண்களையும் சமமாகவே கருதி தாம்பூலம், குங்குமம் கொடுத்து சக்தி தேவியாக நினைத்து வணங்குபவர்கள் தேவியின் அருளைப் பெறுவார்கள். அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகமும், வாக்கிலே தாம்பூலம் கமழுவதாக சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் கூறியுள்ளார். பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிந்தால்,தேவி மகிழ்வாள். கையில் அணிந்துள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, நம் கூடவே இருப்பாள் என்பது நம்பிக்கை.
Leave a Comment