வெற்றியை தரும் விஜயதசமி நன்னாள்


 

நவராத்திரி நாள்களில்,மற்ற நாட்களைக் காட்டிலும் தேவியரை அதிகமாக பூஜிக்க, வேண்டும்.கல்வி, செல்வம், வீரம் என்ற முப்பெரும் செல்வங்களை நமக்கு குறைவில்லாமல் அருளும் தேவியர்களை வழக்கத்தை விட இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கொண்டாடுவது தான் சிறப்பு. விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான்  துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

 

                                                              

இதையே கொல்கட்டா போன்ற வடமாநிலங்களில் துர்கா பூஜையை  விஜயதசமியாகவும்,கொண்டாடுகிறார்கள். தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் போற்றும்  மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மைசூரூ தசரா பண்டிகையில்,இடம்பெறும்  ரத ஊர்வலத்தைக் காண நம்மூரில் இருந்து  மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவது சிறப்பு.

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ,ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது  ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன்,ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

ஆதிசங்கரர், ஒருமுறை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது மண்டனமிஸ்ரர் என்னும் ஞானியுடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார்.

அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூற , ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மறுத்தார். சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி  மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள். அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, சாரதை யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

அப்படி சிருங்கேரியில் சாரதை குடிகொண்டநாள்  தான் விஜயதசமி எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளின் கல்வியை  ஆரம்பித்தால், சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம்.

 விஜயதசமி தினத்தன்று பண்டாசுரனுடனான போரில், தேவி அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சாய்த்து, அசுரனைச் சங்காரம்  செய்தாள். இதனை ஞாபகப்படுத்தும் விதமாக விஜயதசமியன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது.

 தேவியின் வெற்றி விழாவான விஜயதசமியில் நாமும் நற்செயல்களை தொடங்கி வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வை காண்போம்.

 



Leave a Comment