கல்விக் கடவுளைப் போற்றும் கூத்தனூர்
நவராத்திரி நாளில்,கல்வி செல்வம் ,வீரம் என மூன்று செல்வங்களை அருளும் நாயகிகளை வணங்கி வருகிறோம். கடைசி மூன்று நாட்களின் கல்வியின் நாயகியான கலைமகளைக் கொண்டாடுகிறோம். அறிவு தரும் அன்னையான கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
ஒரு முறை படைப்பு தொழிலுக்கு நாயகனான நான்முகனுக்கும், கல்வி,கேள்விகளுக்கு நாயகியான நாமகளுக்கும் இடையே ஒரு வாதம் எழுந்தது. பிரம்ம லோகத்துக்கே தங்களால் தான் பெருமை என்று இருவருக்குள்ளும் வாதம் எழ,ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு" என்று சரஸ்வதி தேவிக்கு அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் என்கிறது தல வரலாறு.
திருத்தலத்தின் சிறப்பு
தமிழ்நாட்டிலேயே ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு இத்திருக்கோவில் ஒன்று மட்டுமே உள்ளது.கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப் பெயர் பெற்றது. இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் வெண்பட்டு உடுத்தி அமர்ந்திருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருந்தாலும், சரஸ்வதி தேவிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே அறியப்படுகிறது.
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தரின் . கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான், இன்று கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. ஒட்டகூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.
திருத்தலத்தின் விஷேசங்கள்:
இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி நவராத்திரி 9 நாட்களும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.குறிப்பாக சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனமும், விஜயதசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததால் பிள்ளைகளை அன்றைய தினம் சரஸ்வதியை தரிசித்து பள்ளியில் சேர்ப்பதும் இத்தலத்தில் மிகவும் விஷேசம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் ஆயக் கலைகளை அன்னையின் அருளால் பெற முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தலத்தில் அருள்பாலித்து வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிப்பட்டு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவோம்.
Leave a Comment