பதினாறு பேற்றை அருளும் மகாலட்சுமி தாயார்
அன்னையர் மூவரை தொழும் அற்புத நாளான நவராத்திரி திருநாளில் `மகாலக்ஷ்மியின் 16 பேறுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஸ்ரீதனலட்சுமி:-
அறம் ,பொருள் இன்பம், வீடு என்பார்கள். இந்த உலக இன்பங்களை நாம் அனுபவிக்க பொருட் செல்வம் வேண்டும். பொருளோடு சேர்ந்த அறம் வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், மனதில் நேர்மையுடனும் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
ஸ்ரீவித்யாலட்சுமி:-
பொருளை அடைந்தால் போதுமா?.அதை காக்கவும், அறவழியில் செலவு செய்யவும் அறிவு வேண்டும் அல்லவா?. நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தி எல்லா உயிரிடத்தும் அன்பாகவும்,இனிமையாகவும் பேச வேண்டும். புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த ,ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
ஸ்ரீதான்யலட்சுமி:-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். நம் பசியை மட்டுமின்றி நம்மை சார்ந்தவர்களின் பசியை போக்குவது நம் கடமை. ஸ்ரீயானவள் பசிப் பிணி போக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானம் என்பார்கள்.அன்னதானம் செய்தால், ஸ்ரீ தான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
ஸ்ரீவரலட்சுமி:-
உடலினை உறுதி செய்வது போல்,நம் மனதையும் உறுதி செய்ய வேண்டும்.நம் வாழ் நாளில் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, அந்த சங்கல்பத்தில் உறுதியுடன் இருக்க ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
ஶ்ரீசவுபாக்கியலட்சுமி :-
ஸ்ரீதேவி இருக்கும் இடத்தில்,மகிழ்ச்சிக்கும் ,மங்களதிற்கும் குறைவு இருக்காது.ஆனால் அந்த மகிழ்ச்சியை நம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ள கூடாது. நம்முடைய மகிழ்ச்சி ,நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் பரவ வேண்டும்.அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாகும் போது சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
ஸ்ரீசந்தானலட்சுமி:-
குழலினிது யாழினிதான மக்கள் செல்வத்திற்கு ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு. இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயானவள் அந்த ஜெகன்மாதா. அவளைப்போலவே தாயற்ற எல்லா குழந்தைகளையும் நம் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு நமக்கு வேண்டும்.
ஸ்ரீகாருண்யலட்சுமி:-
வாடும் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல ,அனைத்து எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதையை தவிர்த்து, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
ஸ்ரீமகாலட்சுமி:-
அள்ளி அள்ளிக் கொடுப்பது தான் அன்னை மகாலட்சுமியின் இயல்பு. நாமும், நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தாலே அந்தஅன்னையின் கருணை நமக்கு எப்போதும் இருக்கும். மேலும் ஸ்ரீ மகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை நமக்கு வழங்குவாள்.
ஸ்ரீ சக்திலட்சுமி:-
எந்த வேலையும் செய்ய நமக்கு ஆன்மீக பலத்தையும்,சக்தியையும் கொடுப்பவளே ஸ்ரீசக்தி லட்சுமி.அவளை வணங்கினால்,நமக்கு சக்தியை என்றும் கொடுப்பாள்.
ஸ்ரீ சாந்திலட்சுமி:-
எவ்வளவு தான் பணமும் புகழும் இருந்தாலும்,மனதில் நிம்மதி இல்லையென்றால் பிரயோசனம் இல்லை. நிம்மதி என்பது நம் மனம்சார்ந்த ஒன்று. ஸ்ரீசாந்தி லட்சுமியை மனதில் இருத்தி தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
ஸ்ரீ சாயாலட்சுமி:-
சம்சார பந்தம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளாமல்,மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்தி ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அவள் அருளைப் பெற வேண்டும்.
ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:-
ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதிப்பதினால், எப்போதும் நம் மனதில் பக்தியும், பிறருக்கு உதவ வேண்டும்,என்ற ஞானமும்,பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையும் கிடைக்கும்.
ஸ்ரீ சாந்தலட்சுமி:-
தன்னை மிதிப்பவரையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போன்று பொறுமையுடன் இருப்பவர்களை சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
ஸ்ரீ கீர்த்திலட்சுமி:-
நாம் செய்யும் எந்த ஒரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால்,புகழுடன் ,ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
ஸ்ரீ விஜயலட்சுமி:-
விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:-
கோபம், பொறாமை, காமம், பேராசை போன்றவை நம் மனதை கெடுக்கா வண்ணம்,மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.
இந்த பதினாறு பேற்றை அருளும் லக்ஷ்மி தேவியை இந்த நவராத்திரி காலத்தில் தினம் தினம் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.
Leave a Comment