அன்னை சாமுண்டியின் வெற்றியைக் கொண்டாடும் மைசூர் தசரா
நவராத்திரியின் ஒன்பது நாளும், ஒன்பது இரவுகள் தனி பெரும் சக்தியாக விளங்கும் அம்பிகை,பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக ஐக்கியமாவது தான் இந்த விழாவின் புராண கதை. தான் படைத்த அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள் என்பதை உலகிற்கு உணர்த்தவே, நவராத்திரியின் போது வீடுகளிலும்,ஆலயங்களிலும் கொலு வைக்கப்படுகிறது.
நவராத்திரி என்றதுமே எப்படி வங்காளிகளின் துர்கா பூஜை நினைவிற்கு வருமோ,அதே போல மைசூர் தசரா விழாவும் நம் நினைவிற்கு வந்து விடும். உலகப் புகழ் பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றான இது, மைசூரில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை நாம் தெரிந்துக்கொள்ளலாம். 1573ம் ஆண்டு மைசூரை ஆண்ட நான்காம் சாமராஜ உடையார் ஒருநாள் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசனம் முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது நேரத்தில் திடீரென இடி, மின்னல், மழை தோன்ற ,பயணத்தை நிறுத்தி விட்டு, ஒரு பெரிய மரத்தின் அடியில் நின்றார்கள்.‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார் மன்னர்.
ஆலயம் தெரியாதபடி மழை மறைக்க,சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.
மகிஷாசுரனை வதம் செய்ததும் மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான். ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ,இங்கு ஒருவளாக காட்சி தருகிறாள்அன்னை. சாமுண்டி மலையில் அருளாட்சி புரியும் அன்னை சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று தான் மகிஷனை வதம் செய்தாள். மகிஷாசுர என்பது தான் மறுவி மைசூர் ஆயிற்று என்ற செய்தியும் உண்டு. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.உலகப் புகழ்ப்பெற்ற இந்த தசரா விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.
இந்த விழாவின் முக்கிய அம்சமே ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான். தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையே அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும். நகரமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவர்க்க லோகம் போல் காட்சியளிக்கும்.
தசராவின்போது மைசூர் மகாராஜா நடத்தும் கொலு தர்பாரும் சிறப்பு வாய்ந்தது. தர்பாரில் அமர்ந்து ராஜா அனைவரையும் ஆசிர்வதிப்பார். தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும் என்பதால்,மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளாலும் நகரமே கோலாகலமாக காணப்படும்.
Leave a Comment