தெய்வங்கள் கொலுவீற்றிருக்கும் கொலுபடிகள்
மங்கையர் கொண்டாடும் நவராத்திரியின் சிறப்பு அம்சமே, அந்த ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். பல படிகளை கொண்ட மேடையில் நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும் பலவிதமான பொம்மைகளை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியும் குதூகலத்தையும் கொடுக்கும்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும். அவரவர் வீட்டு வழக்கப்படி, வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் நிறுத்துவார்கள்.
கலசம் வைக்கும் போது மனதில் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கி, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச் செம்பை, நன்றாகக் கழுவி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
செம்பினுள் பச்சரிசியை நிரப்பி ,அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் மேலும் சிறப்பு.
கலசத்தின் மேல் மாவிலை மற்றும் அதனை சுற்றி வெற்றிலையை வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.
இந்தக் கலசத்தை, அம்மனாகவே பாவித்து பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும். கலசத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். அதனால்,கலசத்தை கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ கலசத்தை வைக்கலாம். தினமும் பூவைத்து , பூஜை செய்ய வேண்டும்.
எப்போதும் கொலுப் படிகளை 5 , 7 ,9 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் கிழக்கு மேற்காக இருக்குமாறு வைக்கலாம். படிகளின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை, விரிக்க வேண்டும். அமாவாசையன்று மரப்பாச்சி பொம்மைகளை ஜோடியாக கொலுப்படியில் வைத்து விடலாம்.
மேல் படிகளில், முதலில் நடுநாயகமாக பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.
அடுத்த படியாக தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம். அதற்கும் அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆன விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.
பிறகு, கிரிக்கெட் வீரர்கள் செட் , பூங்கா செட் ,செட்டியார் பொம்மைகள் என மற்ற பொம்மைகளை வைக்கலாம்.
அதற்கு அடுத்து சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் வைக்கலாம். அடுத்த படியில் பறவை பொம்மைகள்.கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
தினமும் கொலுவின் முன்னால், அழகான கோலங்களைப் போட வேண்டும். இந்த ஒன்பது நாட்களும்,தினமும் மாலையில் விளக்கேற்றி, அந்தந்த நாளுக்குரிய சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் செய்ய வேண்டும். கொலுவின் இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைத்தால், மங்களங்களை அள்ளி தரும்.
இந்த நன்னாளில் ஒருவருக்கொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இந்த விரதத்தின் சிறப்பம்சமாகும்.
Leave a Comment