திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஏன்?
- 200 ஆண்டுகால சுவாரஸ்ய வரலாறு
பம்மல் சம்பந்த முதலியார் நாடக உலகில் முத்திரைப் பதித்தவர்.
அவர் எழுதிய, `தீட்சிதர் கதைகள்' என்ற குட்டிக் கதைகளின் தொகுப்பில் திருப்பதி குடை குறித்த ஒரு வரி வருகிறது.
அதை முதலில் பார்த்துவிட்டு குடையின் கதைக்கு வருவோம்.
கதை இதுதான்...
`ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர், நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான்.
இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபோதுதான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய், ``ஆகட்டும்,
/ இதற்குப் பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ் கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார்.
ஏறும்போது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதைக் கவனித்து, அதற்கு எதிர்புறமாக ஏறினார்.
டிக்கட் விற்கிறவன் /மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது.
பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஓர் இரண்டணாவை எடுத்துக்கொடுத்து ``ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார்.
/ கண்டக்டர் ``ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான்.
உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.
கொஞ்சம் பொறுத்து, மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார்.
/ இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட் கேட்கவே, முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக் கொடுத்து ``ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார்.
கொஞ்சமாவது சுளிக்காமலும் சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். ``ஏய்! நாட்டுப்புறம்!/ கீழே இறங்கு, படிக்கத் தெரியாது..? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கிவிட்டான்.
இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.
இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி/ அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக் கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்.
பிறகு மறுநாள், சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காணவந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடக் காரணம், இந்தப் பெருமாள்தானே.
ஆகவே அந்தச் செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.
இந்தப் புத்தகத்தை 1933-ல் பம்மல் சம்பந்தம் எழுதியிருக்கிறார். அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம்ம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது.
சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.
ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் சீனிவாசுலு நாயுடு வழங்கிய இடத்தில் குடை தயாராகும்.
இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் இது.
வட சென்னையின் பிரதானமான விழா. தமிழ்நாட்டின் நாள்காட்டிகளைக் கிழிப்பவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் `திருப்பதி குடை ஊர்வலம்' என்று படித்திருக்கக் கூடும்.
திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது கோயில் உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.
அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள்.
பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருள்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடன் 10 குடைகள் தயாரிப்பார்கள்.
சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும்.
தேக்குக் கம்புகள், பட்டுத் துணிகள், மூங்கில்கள், வெள்ளி ஜரிகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரிலிருந்து கேசவப் பெருமாள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு குடை தயாரிக்கப்படுகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து பட்டும் ஜரிகையும் வந்து சேர்கிறது.
இதில் இரண்டு குடைகள் திருப்பதிக்கானவை, பெரியவை.
மற்ற எட்டும் வழியில் பெருமாள் கோயில்களில் வழங்கப்பட்டுவிடும்.
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும்.
வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.
நிற்க.
திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி.
சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, `குடை, யானைக் கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய பரபரப்புச் செய்தியாகப் பேசுகிறார்கள்.
செய்தித்தாள்களும், `மாலை 4.30 மணிக்குக் குடைகள் யானைக் கவுனியைக் கடந்தன' என்று குறிப்பிட்டு எழுதுகின்றன.
`குடை, ஓட்டேரியைத் தாண்டுவதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா... ஏன், யானைக் கவுனியைத் தாண்டுவது மட்டும் முக்கியமாக இருக்கிறது' என்ற கேள்வி எனக்குச் சிறுவயதிலேயே இருந்தது.
யாரும் எனக்குப் பதில் சொன்னது இல்லை. 'எல்லோருமே, திருப்பதி குடை யானைக் கவுனி தாண்டிவிட்டதா' என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள்.
அந்தக் கேள்விக்குக் பதில்கூட தேவையிருக்காது.
யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.
இரவு கோயிலில் தங்கிவிட்டு அதிகாலையில் புறப்படும் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. திருப்பதி திருக்குடை ஊர்வலத்தின்போது மேற்கூறிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
சில சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.
நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.
வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை களிமண், கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள்.
அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.
ஒரு காலத்தில் ஏழுமலையான், கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை.
அவர் யானைக் கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை.
யானைக் கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது `கோ இன்சிடென்ஸ்' என்றுதான் சொல்ல வேண்டும்.
லாஜிக்கான இன்னொரு கதையும் சொல்கிறார்கள்.
சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும்.
அந்த வரி செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ்.
அதில் ஆறு கேட்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான்`எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி.
இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும்.
திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது.
அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும்,`குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா' என்று மக்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்.
மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.
- நன்றி
தமிழ்மகன் உடன்
சூளைராமலிங்கம்
Leave a Comment