கல்வி வரம் தரும் கூத்தனூர் சரஸ்வதி தேவி


கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.



Leave a Comment