குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமானுஜர்...


ஶ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் 1006 ஆம் ஆண்டு திரு அவதார உற்சவம் - குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யாகாரஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 1006 ஆம் ஆண்டிற்கான பிரம்ம உற்சவ விழா கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது.

இதையொட்டி ஸ்ரீ ராமானுஜருக்கு 5 நாட்களாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகனம், தங்க பல்லுக்கு, புஷ்ப பல்லுக்கு, யாளி வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இந்தநிலையில் விழாவின் 6 ஆம் நாளான இன்று ஸ்ரீ ராமானுஜருக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து நகரில் உள்ள காந்தி சாலை, திருவள்ளுவர் சாலை, தேரடி சாலை, திருமங்கை ஆழ்வார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பஜனை பாடலுடன், மேளதாளங்கள் முழங்க வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீபாரதனை காண்பித்து ஸ்ரீ ராமானுஜரை வழிபட்டு வணங்கினர்.

 



Leave a Comment