திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் யாரை வணங்க வேண்டும்?தெரிந்து கொள்ளுங்கள்
திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பாக, யாரை வணங்க வேண்டும் தெரியுமா? திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். அதில் குறையொன்றுமில்லைதான். ஆனால், வேங்கடவனை நாம் தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடவேண்டும்.
அப்படி முதல் வணக்கத்துக்கு உரிய மூர்த்தி யார் தெரியுமா?
அவர்தான் வராக மூர்த்தி!
அவரை ஏன் நாம் முதலில் வழிபடவேண்டும்?
அவர்தான், கலியின் துன்பங்களில் இருந்து பக்தர்களைக் காப்பதற்காக முதலில் திருமலையில் எழுந்தருளியவர்!
அவருடைய இடத்தில்தான் இப்போது வேங்கடவன் எழுந்தருளி இருக்கிறார்.
முதல் வணக்கத்துக்கு உரிய வராக மூர்த்தியின் திவ்விய வரலாறுதான் என்ன?
ஒருமுறை வைகுண்டவாசனை தரிசிப்பதற்காக சனகாதி முனிவர்கள் வைகுண்டம் சென்றனர். அப்போது பகவான் நாராயணன், மகாலட்சுமி தேவியுடன் ஏகாந்தமாக இருந்த காரணத்தினால், துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
சினம் கொண்ட முனிவர்கள், அவர்கள் இருவரையும் பூமியில் போய் பிறக்குமாறு சபித்துவிட்டனர்.
முனிவர்களின் வரவை உணர்ந்த பகவான், அவர்களை வரவேற்பதற்காக வாயிலுக்கு வந்தார். துவாரபாலகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தை பகவானிடம் கூறி முறையிட்டனர்.
பகவான், ''உங்களுக்கு முனிவர்கள் கொடுத்த சாபத்தை என்னால் மாற்ற முடியாது. நீங்கள் பல பிறவிகள் நல்லவர்களாகப் பிறந்து முடிவில் என்னை அடைகிறீர்களா அல்லது மூன்று பிறவிகள் கொடிய அரக்கர்களாகப் பிறந்து, என்னால் வதம் செய்யப்பட்டு என்னை அடைகிறீர்களா?'' என்று கேட்டார்.
துவாரபாலகர்கள், ''உங்களை விட்டு நீண்ட காலம் எங்களால் பிரிந்திருக்க முடியாது. நாங்கள் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் முடிந்ததும் தங்களிடம் வரவே விரும்புகிறோம்'' என்றனர்.
பகவானும் அப்படியே வரம் கொடுத்தார்.
அப்படி துவாரபாலகர்கள் எடுத்த முதல் பிறவிதான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு என்னும் இரண்டு அசுரர்கள். இவர்களில் இரண்யாட்சனுக்காகத் தோன்றிய அவதாரம்தான் வராக அவதாரம்.
மிகவும் கொடியவனாக இருந்த இரண்யாட்சன் பூமியை ஒரு பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் மறைத்துவிட்டான். அப்போது பூமிதேவியின் பிரார்த்தனைக்காக பகவான் வராக மூர்த்தியாக அவதரித்து, இரண்யாட்சனைக் கொன்று, பூமியை மீட்டார்.
அப்போது, பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், வராக சுவாமியைப்பார்த்து, ''கலியுகத்தில் பக்தர்களை காப்பதற்காக, நீங்கள் எப்போதுமே வராகமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் கூடவே வைத்தனர்.அதற்கு இணங்கிய வராக மூர்த்தி சேஷாத்ரி மலையில் எழுந்தருளினார்.
துவாபரயுகத்தில் கண்ணன் சொல்லியபடியே யசோதை தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். தன்னுடைய காலத்தை அவள் சேஷாத்திரியில் உள்ள வராக மூர்த்தியின் ஆசிரமத்தில் கழித்து வரலானாள். வராகமூர்த்தி வகுளாதேவிக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது சிறந்த பக்தையாக வகுளாதேவி திகழ்ந்தார். அவர் மிகவும் கர்மசிரத்தையுடன் பகவானுக்கு சேவைகள் செய்து வந்தார்.
மகாலட்சுமியைப் பிரிந்த நாராயணனும் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்து, சேஷாத்திரி மலைக்கு வந்து சேர்ந்தார். சிறிது தூரம் சென்றதும், வராக மூர்த்தியின் ஆசிரமம் அவருக்குத் தென்பட்டது. உடனே அங்கு சென்றார். வராகமூர்த்தி, நாராயணனைப் பார்த்தவுடன், அவர் யார் என்பதை அறிந்துகொண்டார். மிகவும் மரியாதை காட்டினார். அவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நாராயணன் அந்த ஆசிரமத்தில் நுழைந்தார். அவர் பூலோகத்துக்கு வந்த காரணம் பற்றி அறிந்துகொள்ள விரும்பி நாராயணனிடம் பூலோகம் வந்த காரணத்தைக் கூறும்படி வேண்டினார் வராகமூர்த்தி.
அதற்கு நாராயணன் ''வராகக் கடவுளே! மும்மூர்த்திகளையும் சோதனை செய்யும் பொருட்டு வந்த பிருகுமாமுனி என் மார்பில் உதைத்தார். அதற்குத் திருமகள் என்பேரில் கோபம் அடைந்து என்னைவிட்டு கொல்லாபுரம் அடைந்தாள். அவளில்லாமல் வாழ என்னால் முடியவில்லை. அதனால்தான் வைகுண்டத்தைவிட்டு, சேஷாத்திரிக்கு வந்துவிட்டேன். ஆனால், தங்குவதற்கு இங்கு எனக்கு இடமில்லை. எனவே, ஒரு புற்றில் வாழத் தொடங்கினேன். அப்போது ஒரு இடையர் தலைவன் கோடாரியால் புற்றை அடிக்கவே, என் தலையில் ஒரு காயம் ஏற்பட்டது. அதைக் குணப்படுத்த மருந்தைத் தேடும் சமயத்தில் நான் உங்களைக் காணமுடிந்தது. இந்த மலை உங்களின் சொத்து. ஆதலின் எனக்கு இந்த மலையில் சில காலம் தங்க நீங்கள் இடமளிக்க வேண்டும்'' என்று கூறினார்.
இதைக்கேட்ட வராகமூர்த்தி ''நீங்கள் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு நான் இலவசமாக இடம் தர முடியாது. பணம் கொடுத்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்'' என்றார்.
அதற்கு நாராயணன் ''தாங்கள் பெரியவர்! எல்லாம் அறிந்தவர் தாங்கள்! லக்ஷ்மியைப் பிரிந்த நான் ஏழையாகிவிட்டேன். கையில் ஒரு காசும் இல்லை. இந்நிலையில், உங்களுக்கு எப்படி நான் பணம் கொடுக்க முடியும்? தயை கூர்ந்து நீங்கள் எனக்கு இடமளிக்க வேண்டும். இதற்குக் கைம்மாறாக, என் பக்தர்களை இந்த மலைக்கு வருமாறு செய்வேன். அவர்கள் முதலில் உங்களைத் தரிசித்து உங்களுக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்திவிட்டு, அதன் பிறகே என்னை தரிசிக்க வரட்டும். இந்நிலையில், நான் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைத் தாழ்மையுடன் சொல்கின்றேன்” என்றார்.
வராகமூர்த்தியும் அதற்கு சம்மதித்தார். நாராயணனுக்கு அந்த மலையில் நிலம் கொடுத்தார். பின்னர் நாராயணனை நோக்கி ''வகுளாதேவி என்னும் ஒரு சிறந்த பக்தை எனக்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறாள். உனக்கு அவளைக் காண்பிப்பேன். அவள் உன்னை கவனித்துக் கொள்ளட்டும்'' எனக் கூறி வகுளாதேவியை நாராயணனுக்கு அறிமுகப்படுத்தினார். நாராயணனுக்கு வராகமூர்த்தி இலவசமாக அளித்த இடத்தில் ஓர் ஆசிரமம் நிர்மாணித்துக்கொண்டு அதில் நாராயணனும் வகுளாதேவியும் வாழ்ந்து வரலாயினர்.
வராகமூர்த்திக்கு வேங்கடவன் கொடுத்த வாக்கினை நாம் காப்பாற்றவேண்டுமல்லவா? எனவே, நாம் திருமலைக்குச் சென்றால், வேங்கடவனை தரிசிப்பதற்கு முன்பு வராக மூர்த்தியை தரிசித்து வழிபடுவோம்.
Leave a Comment