ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா...
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
விழாவையொட்டி, ஈரோடு பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தார்கள், இதையொட்டி 3 கோவில்களிலும் ஈரோடு மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகமும், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்படுகின்றன. 29-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜையும், 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது.
அடுத்த மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.
6-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மனின் மலர் பல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது. 7-ந் தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்குகளில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
மஞ்சள் நீராட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்த பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஈரோடு மாநகரில் முக்கிய சாலைகளில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். 9-ந் தேதி நடைபெறும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
Leave a Comment