வசந்த காலத்துக்கு வரவேற்பு... யுகாதி வழிபாடு முறை....


காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது.

இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம்.

ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம்.

வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள்.

எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.



Leave a Comment