தமிழே மந்திரம்தான் !
மணி, மந்திரம், மருந்து இவை மூன்றும்தான் மனிதரை அடுத்த உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் மூன்று அடிப்படைகள். இவை மூன்றுக்கும் மனிதருக்கு நேரும் நரை, பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றுக்குக் காரணமானவைகளைத் தடுக்கும் வல்லமை உண்டு.
வடமொழியில் மணி, மந்த்ரா, ஒளஷதா என்பார்கள். இவை தமிழ் மெய்யியலின், அருள் ஞானத்தின் கூறுகள். இவற்றில் மணி என்பது பொதுவாக நாம் அணியும் அல்லது பயன்படுத்தும் பல்வேறு உலோகக் கல் மணிகள், இராசயன மணிகள் ஆகியவற்றைக் குறிக்கும்.
மந்திரம் என்பது ஒரு எழுத்து தொடங்கி பல சொற்கள் வரை அடங்கிய சொல் அல்லது சொற்களை திரும்பத் திரும்ப வெளிப்படையாகவோ அல்லது வாய்மூடிய நிலையிலோ உச்சரித்து ஆற்றலை உற்பத்தி செய்து கொள்வது.
இன்று Positive vibe என்று ஆங்கிலத்தில் இளையோரால் அழைக்கப்படும் நேர்மறை எண்ணங்களை உருவாக்க பல மேலை நாடுகள் Switch words என்று ஆங்கிலத்தில் அழைக்கபடும் மந்திரச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த சொற்களுக்கு மனிதனின் Subconscious mind எனும் ஆழ் மனதில் பதியும் தன்மை உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். ஆழ்மனதிற்குச் செல்லும், பதியும் எந்த ஒரு கட்டளையும் தடங்கல்களைத் தகர்த்து செயல்புரியும் வல்லமை கொண்டது என்கின்றனர் அவர்கள்.
இதையே மந்திரம் என்று பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மெய்யியல், இறையியல், அருள்ஞானக் கல்வியில் பின்பற்றப் பட்டுவருகிறது. அரசமரத்தடி விநாயகர் கோயிலாகட்டும், வேப்பமரத்தடி அம்மன் கோயிலாகட்டும் மந்திரங்கள் இல்லாத வழிபாடே தமிழில் கிடையாது.
அப்படிப்பட்ட மந்திரங்கள் அடங்கிய பாடல்கள்தான் நமது தமிழ் அருளாளர்கள் இயற்றிய பாடல்கள். இவற்றைத் திரும்பத் திரும்ப பாடுவது அல்லது வாசிப்பது என்பதே மந்திரங்களை உச்சரித்து ஆற்றலை உற்பத்தி செய்து கொள்வதற்காகத்தான், செயலில் வெற்றி பெறுவதற்காகத்தான். வெற்றி பெறுதல் என்பதை சித்தி பெறுதல் என்றும் அழைப்பர். சைவ நெறியில் 63 நாயன்மார்கள் என்று அழைக்கப்படுவோர் 63 விதமான சித்திகள் புரிந்தவர்கள் என்கிறார் இராமலிங்க வள்ளல் பெருமானார்.
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் உள்ளிட்ட திருமுறைகள் எனப்படும் அத்தனை தமிழும் மந்திரங்கள் அடங்கியவையே. வள்ளல் பெருமானாரின் திருஅருட்பா மற்றும் அகவல் உள்ளிட்ட அனைத்தும் மந்திரங்களே.
இந்தத் தொடர் கட்டுரைகளில் ஆங்கில Switch words எனும் ஆங்கில எழுத்து மந்திரங்கள் பற்றியும், இவற்றுக்கு முந்தைய தமிழ் மந்திரங்கள் பற்றியும் பார்ப்போம். உலக மொழிகளில் தமிழ் மட்டுமே சிவானுபூதியை அளிக்க வல்லது என்கிறார் இராமலிங்க வள்ளல் பெருமானார். என்றால், தமிழ் மொழி என்பதே மந்திர மொழி என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?
- தொடரும்
-வளர்மெய்யறிவான்
Leave a Comment