கந்த சஷ்டி கவசம் எத்தனை தெரியுமா?


துதிப்போர்க்கு வல்வினை போம் .... எனத் தொடங்கும் கந்தசஷ்டிக் கவசம் மட்டும்தான் பெரும்பாலானவர்கள் கேட்டிருப்போம். ஆனால் மொத்தம் ஆறு கந்த சஷ்டி கவசங்கள் உள்ளன. கந்த சஷ்டிக் கவசங்களை இயற்றியவர் பாலன் தேவராயன் என்பவர். இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள மடவிளாகம் எனும் ஊரைச் சேர்ந்தவர்.

மைசூரு தேவராச உடையாரிடம் காரியதரிசியாகப் பணியாற்றியவர் என்றும் இன்னொரு தகவல் இவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வல்லூர் எனும் ஊரைச் சேர்ந்த வீராசாமி பிள்ளை என்பவரது மகன் என்றும் கூறுகிறது.

இவர் கந்த சஷ்டி கவசங்களை சென்னிமலை முருகன் கோவிலில் இயற்றினார் எனும் ஒரு தகவலும், பழனியில் இயற்றினார் என்றும், திருச்செந்தூரில் இயற்றினார் என மற்றொரு தகவலும் உள்ளது.

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் கடலில் விழுந்து இறக்க முற்பட்டு திருச்செந்தூர் சென்றதாகவும் அந்த எண்ணத்தில் இருந்த அவருக்கு செந்திலாண்டவர் காட்சியளித்து கந்தசஷ்டி கவசம் பாடும் திறன் தந்ததாகவும் ஒரு தகவலும் உள்ளது. எனினும், பொதுவாக இவ்வாறு பாடல் இயற்றும் பெரும் பேராளர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து எல்லாக் கோயில்களுக்கும் பாடல் எழுதுவது வழக்கமன்று.

ஞான சம்பந்தர் முதல் இராமலிங்க வள்ளல் பெருமானார் வரை அந்தந்த கோயில்களுக்கு சென்று அக்கோயிலில் வீற்றிருக்கும் நிறைந்திருக்கும் இறைத் தன்மையை உள்வாங்கிப் பாடுவதே வழக்கம். இத்தகைய பாடல் பாடப்படும் தலங்கள்தான் "பாடல் பெற்ற தலம்" என்று அழைக்கப் பெறுகிறது.

இந்தப் பார்வையுடன் அணுகினால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று ஆறு கந்த சஷ்டி கவசங்களைப் பாடியிருக்க வேண்டும் பாலதேவராயன் சுவாமிகள். இதில் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் பாடிய, துதிப்போர்க்கு வல்வினைபோம் .... எனும் பாடல் பிரபலம் பெற்று விட்டது. அவ்வளவே.

ஆனால், பாலதேவராயன் இயற்றிய பிற கந்த கவசங்களும் மிகவும் வலிமை வாய்ந்தவை, பக்தி, ஞானம் எனப் பெரும் பொருள் கொண்டவை. அவற்றையும் நாம் பாராயணம் செய்வது அந்தந்தப் படை வீடு அளிக்கும் பலன்களைப் பெற உதவும்.

பழனி, சுவாமி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி (கை), பழமுதிர் சோலை ஆகிய ஆறுபடை முருகனுக்கும் தனித்தனி கந்த சஷ்டி கவசங்களை பாலன் தேவராயன் சுவாமிகள் முருகப்பெருமானின் திருவருளால் அருளியுள்ளார். இனி அடுத்தடுத்து வரும் தொடர்களில் ஒவ்வொரு படைவீட்டிற்கும் உகந்த கந்தசஷ்டி கவசங்களை பார்க்கலாம்...

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்



Leave a Comment