நாகப் பாம்பின் சிலையும் 7 கன்னிமார்களும் ! வியக்கவைக்கும் உண்மை...


இரண்டு நாகப் பாம்புகள் ஒன்றுக்கொன்று பின்னலிட்டு நிற்பது போன்ற சிலை இல்லாத கோயிகளே இருக்காது. அதன் உச்சியில் சிவ லிங்கம் அமைக்கப் பட்டிருக்கும். கூடவே ஏழு கன்னிமார்கள் சிலையும் வைக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தினடியில் அமைந்திருக்கும்.

இன்று நாம் அம்மன், சிவன், முருகன், பெருமாள், திருமால் என பல பத்து தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வணங்குகிறோம். இவற்றில் லிங்கம் தவிர பிற இறைவர்கள் மனித உடல் வடிவில்தான் திருவுருவச் சிலைகளாக அமைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த திருவுருவச் சிலைகள் அமைக்கப்படாத இடங்களில், கோயில்களில்கூட நாகப் பின்னல் சிலையும், கன்னிமார் சிலையும் கட்டாயம் இருக்கும். கருப்புசாமி, முனியப்பர் கோயில்களிலும் கட்டாயம் இருக்கும்.

அதுவும் காடு மற்றும் மலை சார்ந்த இடங்களில் நாக மற்றும் கன்னிமார் சிலைகள் உறுதியாகக் காணப்படும். கருப்பசாமி, முனியப்பர் சாமிகள் ஓகத்தில் (யோகம்) உயர்நிலைகளை எட்டியவர்கள்தான். ஆசிவகர்கள் என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். ஆசி வழங்கி அருள்புரியும் மகான்களே ஆசிவகர்கள்.

சித்தர்கள் பல்துறை வித்தகர்கள்.

சித்தர்களின் ஆற்றல் பற்றி பாம்பாட்டி சித்தர் பெருமானார்,
எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்
கடு விஷந் தனைக் கக்கி ஆடுபாம்பே!

தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்:
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்:
ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்:
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!

என்கிறார்.

சர்வ வல்லமை கொண்டவர்களாக உயர்வு பெற்றவர்களே சித்தர் பெருமக்கள். சித்தர் பெருமக்கள் வலம் வந்த, வரும் மலைகளில் நாக சிலையும், 7 கன்னிமார்கள் சிலையும் காணப்படும். சரி பொதுவாக மனித உருவங்களில் இருக்கும் திருவுருவச் சிலைகள் இறைவரைக் குறிப்பிடுகின்றன என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இந்த நாக மற்றும் கன்னிமார்கள் சிலைகள் குறிப்பிடும் கடவுளர் யார்? இறைவர் யார் ? எனும் கேள்வி எழுவது இயற்கைதான். இதில் நாகப் பாம்புகளின் சிலை இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டு மேல்நோக்கி நின்று கொண்டிருப்பது போலவும், அவற்றின் முகங்கள் சந்திக்கும் இடத்தில் சிவலிங்க உருவம் இருப்பதையும் காண முடியும்.

இந்த சிலையை மனித முதுகெலும்பின் வடிவமாகக் காண வேண்டும். இரண்டு பாம்புகள் இடது பக்க சுவாசம் மற்றும் வலது பக்க சுவாசமாகக் கருதுதல் வேண்டும்.  இந்த இடது வலது மூச்சு சுவாசங்களை இடகலை, பிங்கலை என்றும் சந்திர நாடி, சூரிய நாடி என்றும் அழைப்பர்.

மனித உடலில் முதுகெலும்பு முடிவுறும் அடிப்பகுதி மூல ஆதாரம் அதாவது மூலாதாரம் என்று அழைக்கப்படுகிறது. பாம்புகளின் வால் பகுதி மூலாதாரத்தையும் வாய்ப் பகுதி சந்திக்கும் இடம் புருவ மத்தியையும் குறிக்கின்றன.

இரண்டு பாம்புகளின் வாய்கள் சந்திக்கும் புருவ மத்தியில்தான் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புருவ மத்தியைத்தான் சிற்சபை என்கிறார் இராமலிங்க வள்ளல் பெருமானார். சீவன் எனும் சிவம் உள்ள இந்த சிற்சபையைக் குறிக்கவே சிவலிங்கம் வடிவமைக்கப்படுகிறது.

சரி கன்னிமார்கள் அதுவும் ஏழு கன்னிமார்கள் எதற்கு?

மூலாதாரத்தில் தொடங்கி உச்சந்தலை வரை உடலில் உள்ள 7 ஆற்றல் மையங்களை, சக்கரங்களைக் குறிக்கும் கடவுளர்கள்தான் இந்த ஏழு கன்னிமார் சக்திகள்.

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்



Leave a Comment