திருவள்ளூர் ஸ்ரீ தீர்த்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூரில் உள்ள அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சான்றோர்களை தன்னகத்தை கொண்டு விளங்கும் தொண்டை வள நாட்டில் திருஞானசம்மந்த சுவாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் சிவாலயங்களுக்கு நடுநாயகமாக திகழும் வீஷாரண்ய ஷேத்திரம் என்று அழைக்கப்படும் திருவள்ளூரில் உள்ள திருமாலின் வினையை தீர்த்து அருளிய திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வர் சுவாமி என்ற நாமத்துடன் திருக்கோவில் கொண்டு பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஜீர்னோத்தாரணம் செய்து வண்ணம் தீட்டி திருப்பணிகள் நிறைவு பெற்று புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகாம முறைப்படி இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு 6 ம் கால யாகபூஜையும், 8.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி,சண்டேச யாகமும், 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் 9.30 மணிக்கு இராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஶ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர், பெரியகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் செய்திருந்தார்.
Leave a Comment