ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா... அற்புதமான வீடியோ காட்சி...
பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் நம்பெருமாளை சேவித்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி நேற்று வரை வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெற்றது. இந்நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4.45 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர்.
பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
Leave a Comment