தீமை அழிந்த நாளே தீபாவளி திருநாள்
பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் தீபஒளியின் அழகோடு, வான வேடிக்கை, பலவகையான இனிப்பு தின்பண்டங்கள் என கோலாகல உற்சாகம் தான் தீபாவளி. ஆனால் இது மட்டும் காரணம் இல்லை. மற்ற பண்டிகைகளில் இருந்து தீபாவளி வேறுபட இன்னும் ஒரு காரணம் உண்டு. ஒருவன் இறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். நரகாசுரன் என்ற அரக்கன் இறந்த நாளான நரக சதுர்த்தியதைதான் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.
ஹிரண்யாட்சனை சம்ஹரிக்க, திருமால் எடுத்த வராக அவதாரத்தில்,பூமி தேவிக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனிடம் தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்கிற வரத்தை பெற்று இருந்தான்.
பௌமன் எனும் அந்த நரகாசுரன் ,காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். பெயருக்கு ஏற்றார் போல் ஜ்யோதிஷபுரம் ஒளிபொருந்திய நகரமாக விளங்கியது.
எல்லா உலகத்தையும் தன் வசப்படுத்த நினைத்த நரகாசுரன் , கெட்ட சகவாசத்தால்,எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்த நரகாசுரன்,“நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரம் கேட்டான். பிரம்மாவும் ,“நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்”எனக்கூறி வரத்தை கொடுத்து விட்டார்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு அசுரக் குணம் தலைக்கேற தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர்.
தன் தாய் பூமாதேவியினால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர். போர் ஆரம்பித்தது.
சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், சாரதியாக சத்தியாபாமாவை கண்ணன் அழைத்தார். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு ‘முராரி’என்ற பெயர் வந்தது. நடந்த கடும்போரில், நரகாசுரன் தன் ‘கதையை’ கண்ணன் மேல் வீச, மாயக் கண்ணனும், மயங்கி விழுந்ததுபோல் நடித்தார்.
சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு, நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் மாண்டான்.அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.
நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். சாகும் தருவாயில்,கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். “அப்படியே ஆகட்டும்”என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
நம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை தீப ஒளியாக ஏற்றி வைப்போம். தீபத் திருநாளை கொண்டாடுவோம்.
Leave a Comment