நரகத்தில் இருந்து தப்பிக்க ,நரக சதுர்த்தசி விரதம்
ஒரு முறை தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவர் இருண்ட காடு ஒன்றில்,அவர் தனது மனைவி மற்றும் மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். வெளிச்சமே பார்த்திராத கானகம் என்பதால், இருட்டோடு சேர்ந்து துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், மற்றும் அரக்கர்களால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். இருள் நீங்கி அந்த இடம் ஒளியால் நிறைய விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார்.
அப்போது ஒரு நாள் சனாதன முனிவர் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் தனது சந்தேகத்தைக் கேட்டார். “மனிதன் துன்பத்திலிருந்தும், இருளிலிருந்தும் விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் துன்பத்தையே பாதையாக கொண்டு பட்டினி, உடலை வருத்திக்கொண்டு தவம், நேர்ச்சைகள் ஆகியவையாகத்தான் உள்ளன. இது மேலும் மனிதனை துன்பப்படுத்தும் அல்லவா? ஏற்கனவே துன்பப்படும் மனிதன் இன்னும் துன்பத்தை அனுபவித்து தான் நல்வாழ்வைக் காண வேண்டுமா? இதுபோன்ற பாதையைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகிறதா? மனம் மகிழ்ச்சியடைய சுலபமான வழி ஏதும் இல்லையா?” என அத்தனை நாள் தன் மனதுள் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கேள்வியாக கேட்டார்.
இதற்கு பதிலளித்த சனாதனர், “தீவிர விரதங்களால் உடலை வருத்திக்கொண்டு மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகியவற்றை அடக்கித்தான் ,ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது எந்த வேதங்களும் வகுக்கவில்லை.
மாறாக தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை தானும் சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து,ஒளி எங்கும் பரவ தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம்”என போதித்தார். மனமகிழ்ந்த தீர்க்கதமசும் இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார்.
ஐப்பசி மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நாம் செய்த பாவங்களால் ,நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு அன்று பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் அமர்ந்து நமக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம்மையும்,நம்மை சேர்ந்த குடும்பத்தாரையும் இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். தீபாவளி திருநாள் தோன்றிய கதை இது .
தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்வதால், குபேர வாழ்வை பெறலாம். மேலும் யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜிப்பதால், நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் ,குடும்பத்தில் அமைதியும் தம்பதியினரிடையே ஒற்றுமையும் செழிக்கும்.
Leave a Comment