திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?
சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?
வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்!
பக்தர்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்திருக்கிறார்கள். திருவையாறு சங்கீத மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார். கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது.
இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை முடிந்தது. தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார்.
அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அதன்பின் ஏகாந்த சேவையை மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக ஒரு கதை உண்டு.
ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர்.
பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும். அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும்.
சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்! பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள்.
இரவு வேளையில் வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்னமாச்சார்யர் பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப் பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும் திறக்கப்படும்.
அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து பூஜைகள் நடந்தேறும்.
முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள். பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். பூக்கள் வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும்.
அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத் தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத் தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இவை எல்லாம் முடிந்த ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும். என்ன நைவேத்தியம்?! தயிர் சாதம்! மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும்.
அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள் ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்!பெருமாளின் நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் ஆகும்.
Leave a Comment