எமபயம் தீர்க்கும் ‘எமதீபம்’


 

தீபாவளி ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.அங்கு தீபாவளியின்  முதல் நாளை  ‘தந்தேரஸ்’என்று அழைக்கிறார்கள். ‘தந்தேரஸ்’ அன்று நாம் செய்யப்படும் தானமானது  பலமடங்கு பலனளிக்கும் என்பது வட மாநில மக்களின் நம்பிக்கை.

தீபாவளித் திருநாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியம் தானே அனைத்திற்கும் பிரதானம். அதனால் ஆரோக்கியம் அருள வேண்டி வைத்தியத்திற்கு தலைவரான  தன்வந்திரியைக் குறித்துப் பிரார்திக்கப்படுகிறது . ‘தந்தேரஸ்’அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது , எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க  யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன. 

இது குறித்து இன்னொரு தகவலும் உண்டு. சனி பகவானும் யமனும் சகோதரர்கள். ஆயினும்,தம்முள்  கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள். யமனும் சனியும்  தீபாவளி அன்று மட்டும்  தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

மகாளய பட்ச நாட்களில் ,தாங்கள் வசித்த ஊருக்கு தங்கள் சந்ததியினரை பார்க்க வரும் மறைந்த நம் முன்னோர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

 

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றி, அந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல, யமனும் மகிழ்ந்து அருளுவானாம்.

 இவ்வாறு யமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வணங்கினால்,  விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமல் ,ஆரோக்கியமாக வாழ யமன் அருள் புரிவார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை. நம் இல்லங்களை தீபங்களால் வண்ணமயமாக்குவோம்.மன இருளை விரட்டுவோம்.



Leave a Comment