சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு... 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்ட்து 17 தேதி முதல் மண்டல காலம் தொடங்கியுள்ளது. நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வரும் நவம்பர் 30ம் தேதி வரை 8.79 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் நேற்று வரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பகதர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டதிலிருந்து 18 படி அருகே சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் வரும் மகர விளக்கு வரை சகஸ்ரகலச வழிபாடு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டுக்காக பூஜை செய்யப்பட்ட கலசங்களை கோயிலுக்கு கொண்டு செல்லும் வழியில் பக்தர்கள் குறுக்கே செல்லக்கூடாது. இதனால் பக்தர்களை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால் இதன் மூலம் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும்.
இதனால் மகரவிளக்கு வரை சகஸ்ரகலச வழிபாட்டை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் அஷ்டாபிஷேகம் ஆகியவை மட்டுமே மகரவிளக்கு முடியும் வரை நடத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Leave a Comment