காசி விஸ்வநாத சுவாமி கோயில் விசேஷ விளக்கு பூஜை


84 ஆண்டுகளுக்கு பிறகு பழமையான முறையில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை பேரூராட்சி, மருத்துவக்குடி கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோயில் பழமையான முறையில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 84 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மகா கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இன்று மாலை விசேஷ விளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் குடும்ப மேன்மைக்காகவும், தங்களது வேண்டுதல்களை சுவாமி விரைந்து நிறைவேற்றிட வேண்டியும், திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமமிட்டு, மலர் சரம் சாற்றி,  திரி கொண்டு தீபம் ஏற்றி, தேங்காய், பூ, பழம், வெற்றிலை, தாலிகயிறு, மஞ்சள், குங்குமம் என மங்கள பொருட்கள் கொண்டு, மேளதாள வாத்தியங்களுடன், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் கூற, குங்குமம், உதிரி பூக்கள் கொண்டு திருவிளக்கின் பாத பகுதியில் அர்ச்சனை செய்து, நிறைவாக மங்கள ஆரத்தி செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment