மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணி....
ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பழமையான முறையில் சுண்ணாம்பு பூச்சு கொண்டு திருப்பணி நடக்கிறது.
இக்கோயில் வரும் 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டார். தொடர்ந்து 45 நதிகளின் புனித தீர்த்தங்களுக்கு வழிபாடு செய்து யாகசாலை மண்டபம் மற்றும் புனித நீர் ஊர்வலத்திற்கான பக்தர்களுக்கான 500 குடங்கள், புடவைகள் மற்றும் கோயில் விமானத்தில் வைக்கப்படும் கலசங்களையும் பார்வையிட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகளையும் கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், பழமையான கோயில்களை புராதானத்தை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம். மருத்துவக் குடியில் 84 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் சிதலமடைந்து காணப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை மிகவும் சிறப்பாக திருப்பணி செய்திருப்பது பாராட்டுக்குரியது.
கோயில்களில் இறைவழிபாட்டிற்கு இடையூறு தரக்கூடிய எந்த ஒரு செயலும் அனுமதிக்க கூடாது. அத்தகைய வகையில் கோயில்களில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் யோசனை வரவேற்கத்தக்கது. அதனை அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோயில்களில் கட்டண தரிசனம் இருப்பது தடுக்கப்பட வேண்டும்.
அதேபோல் நமது பண்பாடு, கலாச்சார உடை அணிந்து கோயில்களில் வழிபாடு செய்வது மிக அவசியமானது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் திருப்பணி நடக்கிறது. சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Leave a Comment