மூவகை வடிவங்களை கொண்டருளும் திருச்செந்தூர் முருகன்...


திருச்செந்தூர் முருகன் யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களை கொண்டருள்பவர் திருச்செந்தூர் முருகன். இக்கோயிலில் மூன்று கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்கத்திலும் மற்றொன்று செப்பினால் ஆனது, திருவிழாவின் போது செப்பு கொடி மரத்தில்தான் கொடி ஏற்றப்படுகிறது.

இங்கு கந்த சஷ்டி விழா 12 நாள்கள் நடைபெறும் முதல் ஆறு நாள்கள் சஷ்டி விரதம் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருமணம், தொடர்ந்து ஐந்து நாள்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும். கந்த சஷ்டி என்றால் கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

ஷண்முகர், ஜயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்கள் தனித் தனிச் சந்நிதிகளில் அருளுகின்றனர். குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி" என்றழைக்கின்றனர். இங்கு மூலவர் கிழக்கே கடலைப் பார்த்தபடி அருளுகிறார்.

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜ கோபுரம் ஒன்பது அடுக்குகளுடன் 157 அடி உயரம் கொண்டது. ஒரு வருடத்தில் ஒரே நாள் முருகன்- தெய்வானை திருமணத்தன்று மட்டும் இது திறக்கப்படுகிறது.

இக்கோயில் ஓம் என்ற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. செந்தூரில் முருகப் பெருமான் ஆதியில் தங்கிய இடம் சிங்கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். தூண்டுகை விநாயகரை தரிசித்த பின் செந்தில் ஆண்டவரை தரிசிப்பது முறையாகும். திருச்செந்தூர் கோயிலில் நவகிரகங்களுக்கு சிலைகள் இல்லை.

இந்தத் தலத்தை 'வீரபாகு' ஷேத்திரம் என்றும் கூறுவர், காவல் தெய்வமான அவருக்குப் பிட்டமுது படைத்த பின்பே செந்தில் ஆண்டவருக்கு ப்பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. திருச்செந்தூர் கோயில் செந்தில் ஆண்டவனின் இலை விபூதி இங்கு தனித்தன்மை வாய்ந்த சிறப்புப் பிரசாதமாகும்.

பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்குப் பின்னே கல்லால மரத்தில் 4 வேதங்களும் கிளிகள் வடிவில் உள்ளன. இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இது குருவுக்கான தலமாகவும் போற்றப்படுகிறது.



Leave a Comment